Sunday, 18 February 2018

முப்பொழுதும் உற்சாகமுடன் இருக்க: உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படு


தொலைநோக்குடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் ஜெகதீஷ் வாசுதேவ்: எவ்விதமான தொலைநோக்கும் இன்றி, ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இன்றி, இங்கு ஒருவர் வாழ வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி, அவர் கள்ளங்கபடமற்றவராகவும் அகங்காரம் அற்றவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் மட்டும் தான் இங்கே சும்மாவே ஆனந்தமாக வாழ முடியும். அவருக்கு தொலைநோக்கும் தேவையில்லை, அல்லது எதைப் பற்றிய விருப்பமும் கிடையாது. ஆனால் ஒருவர் இந்நிலையில் இல்லாவிட்டால், அவர் தொலைநோக்குடன் வாழ்வது மிகமிக அவசியம்.

இன்று மனிதனின் விருப்பத்திலும், தொலைநோக்கிலும் ஒரு தெளிவு இல்லை. உலகிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை 'வாழ்ந்து' கொண்டிருக்கிறார்கள். அல்லது, தான் விரும்புவது என்ன என்று தெரிந்திருந்தும், தங்களுக்கு வேண்டியதை நடத்திக் கொள்ளும் மனஉறுதியோ, தொலைநோக்கோ அவர்களுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் தங்களுக்கு எது மிக எளிதாகக் கிடைக்கிறதோ, தங்கள் கைகளுக்கு எது எட்டுகிறதோ, அதுவே போதும் என்று இருந்து விடுகின்றனர். 

ஏதாவது ஒன்று எளிதாகக் கிடைக்கிறதென்றால், அது வேண்டுமா, வேண்டாமா என்றெல்லாம் பார்க்காமல், அதை அடைவதற்கு மக்கள் தயாராகி விடுகின்றனர். எளிதாகக் கிடைக்கிறது, அது ஒன்றே போதும் அவர்களுக்கு! கடந்த ஆயிரம் ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளி சூழ்நிலையில் அதிசயத்தக்க மாறுதல்களை மனிதன் செய்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில், 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற ஒரு எண்ணத்தால், தனக்கும் இவ்வுலகிற்கும் அவன் மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறான். இலட்சம் வருடங்களில் நடக்காதது, கடந்த 1000 வருடங்களில் நடந்திருக்கிறது. அதே நேரத்தில், 'எளிதாகக் கிடைப்பதெல்லாம் வேண்டும்' என்று, வேண்டாதவைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தனக்கு உண்மையிலேயே தேவையற்ற பலவற்றையும் அவன் செய்திருக்கிறான். இவ்வுலகில் மனிதன் செய்திருக்கும் பலப்பல மாற்றங்கள், இன்று அவனுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே 'செய்வதற்கு எளிது' என்ற ஒரு காரணத்தாலேயே அவனால் செய்யப்பட்டது.

தேவையான தொலைநோக்கு இல்லாமல், தனக்கு தோன்றியதை எல்லாம் செய்துவிட்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதன் விளைவுகள் தெரியும் போது, மனிதன் மனம் நொந்து கொள்கிறான். தனக்கு உண்மையிலேயே என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கவனம் இன்றி, 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதால், வரமாய் இருந்திருக்க வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இன்று சாபக்கேடாய் ஆகியிருக்கிறது. இது போன்ற கண்ணோட்டத்தில் வாழ்வைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டுவிட்டதால், அவனின் வாழ்வை சுலபமாகவும், சுகமாகவும் மாற்றவல்ல விஞ்ஞானம், இன்று அவன் வாழ்வை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கும், மனஉறுதியும் இன்று இவ்வளவு குறைவாக இருக்கக் காரணம், சுற்றி இருக்கும் உலகை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தான். இந்த நொடியில் உலகின் போக்கு எப்படியிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டே நம் வாழ்வை நிர்மாணிக்க முயல்கிறோம். தற்போதைய நிலவரத்திற்கு ஒத்து, தொலைநோக்கை முடிவு செய்தால், மீண்டும், எது கிடைக்குமோ, எது எளிதாக நடக்குமோ, அதற்கே முன்னுரிமை வழங்குவோம். அதனால், எதை அடையமுடியும், எதை அடையமுடியாது என்று யோசிக்க வேண்டாம்.
வாழ்வில் எதை உச்சபட்சமாக அடைய முடியுமோ அதை உங்கள் தொலைநோக்காகக் கொள்ள சிந்தியுங்கள். உங்களைப் பொறுத்தவரை உயர்ந்தது எதுவோ, அதற்காக வாழுங்கள். அது நடக்குமா, நடக்காதா என்பது பற்றி கவலையில்லை. அது நடக்கிறதோ, இல்லையோ, அத்தகைய தொலைநோக்குடன் வாழ்வதே மிக உயர்வானதாக, நிறைவைத் தருவதாக இருக்கும். அப்படி வாழ்வது யாருக்குமே மகிழ்ச்சி தரும் செயலாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கு வைத்திருக்கிறீர்கள்… அது எளிதானதா, கடினமானதா என்று உங்களுக்கு கவலையில்லை, அதை சாதிக்க முடியுமா, முடியாதா என்ற தயக்கம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதன் முடிவைப்பற்றி உங்களுக்குக் கவலையில்லை. ஆனால் உங்கள் தொலைநோக்கிற்காக உங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கிறீர்கள். இப்படி வாழ முடிந்தால், இதுவே உன்னதமான நிலைகளை அடைவதற்கு மிக எளிய வழியாக இருக்கும். 
 உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது மட்டுமே கண்ணாக, வேறு எப்பக்கமும் கவனம் சிதறாமல், அது நடக்குமா நடக்காதா என்ற யோசனை இல்லாமல், உங்கள் உயிரையும் அதற்கென கொடுத்திடுங்கள். அவ்வாறு இருந்தால், அது நமக்குள்ளும், வெளியேயும் இருக்கும் தடைகளை தாண்டிச் செல்ல உதவுவதோடு, வாழ்க்கை, உயிர், மற்றும் அதைத் தாண்டிய பரிமாணங்களை அறிவதற்கும் வழிவகுக்கும். மனிதர்கள் எப்போதும் குழம்பிய குட்டையாய், தங்களுக்கு வேண்டாதவற்றையே பெரும்பாலும் தேடிக் கொண்டிருப்பதால் தான், அவர்களுக்கு வேண்டியது அவர்களுக்குக் கிட்டுவதில்லை. வாழ்வின் எக்கணத்திலும், நாம் கடந்து வந்திருக்கும் சூழ்நிலைகளையே அளவுகோலாகக் கொண்டால் அல்லது நம் தர்க்க அறிவிடம் ஒன்று முடியுமா, முடியாதா என்று நாம் கேட்டால், அது எப்போதுமே சராசரியான விஷயங்கள் மட்டுமே சாத்தியம் என்று சொல்லும். ஆனால் ஒருவருக்கு அவரது தொலைநோக்கு தெள்ளத் தெளிவாக இருந்தால், தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அதுவே வேண்டும் என்று அவர் ஏங்கினால், மிகமிக உயரியவையும் அவர் காலடியில் வந்து விழும்.

இது சாக்ரடீஸின் வாழ்வில் நடந்தது: சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணத்தால், துரதிர்ஷ்டவசமாக அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் தண்டனைக்காக அவர் காத்திருந்த அந்த கடைசி சில வாரங்களில், அவருக்கு இசையின் மீது ஆர்வம் பிறந்தது. தன் வாழ்வில் அதுவரை அவர் தத்துவமேதையாகவே அறியப்பட்டார். அவரும் அவ்வாறே இருந்தார். இசையின் மீது அப்படி ஒன்றும் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடைசி சில வாரங்களே இருந்த போது அவருக்கு இசையின் மீது நாட்டம் வந்தது. அந்தக் கடைசி வாரங்களிலே இசையைக் கற்க ஆரம்பித்து, மிக அற்புதமாகவே இசைக்க ஆரம்பித்துவிட்டார். இசையின் வாயிலாக தன் வாழ்வையே புதுவிதமாய் அனுபவிக்கத் துவங்கினார் அவர். திடீரென அவருக்கும், அவரது வாழ்விற்கும் இசை ஒரு புதிய அழகை ஏற்படுத்தியது. அன்று அவரைக் கொல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் ஒரு பெரிய இசைக் கலைஞனாய் வளர்ந்திருக்கலாம். நாமும் அவரை தத்துவமேதையாக அல்லாமல், இசைவல்லுநனராய் அறிந்திருப்போம். இதுபோல், ஒரு மனிதன் முடிவு செய்தால்… தன் வாழ்நாளின் கடைசி வாரங்கள் என்றாலும், அந்தக் கடைசி நாட்களிலும் கனவு காண்பதற்கும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்குமான மனோதிடமும், உறுதியும் அவனுக்கு உண்டு.

இவையெல்லாம் தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் ஒரு விஷயம் - உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாக இருந்தால், அதுதான் எல்லாம் என்று நோக்கம் வைத்திருந்தால், இன்று மிகக் கடினமாகத் தோன்றுவது கூட, நாளையே உங்கள் வாழ்வில் சராசரி விஷயமாகிவிடும். எவ்வித ஆரவாரமும் இன்றி, உங்கள் காலடியில் அது வந்து விழும். ஆனால் ஒவ்வொரு கணமும், 'இது முடியுமா, முடியாதா' என்று உங்கள் தர்க்க அறிவை நீங்கள் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் குழப்பமே, இவ்வுலகிலும் பிரதிபலிக்கத் துவங்கிவிடும்.

உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அது, இன்றைக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி அல்ல. ஒரு மனிதனாக, உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியது என்ன? உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் மிக உயரியது எது? என்று பார்த்து அதற்கான தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரேயொரு மனிதனுக்கு தொலைநோக்கு இருந்து, மற்றவர்கள் எல்லாம் அதற்கு எதிராக வேலை செய்தால், மிகக் குறைந்த அளவில்தான் அதை நோக்கிய முன்னேற்றம் இருக்கும். ஆனால் பலர் ஒன்றாக இணைந்து ஒரே தொலைநோக்கில் செயல்பட்டால், மிகமிக அழகான விஷயங்கள் நம் சமுதாயத்தில் நிகழும்!

--தினமலர் நாளிதழிலிருந்து.


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...