Sunday 18 March 2018

உலர் சலவை முதல் நல வாழ்வு மையம் வரை:

துணிச் சலவை செய்வது முதல், சகலவிதமான பொருட்களை விற்பனை செய்பவரும், தொழில் முனைவோர் விருது பெற்றவருமான, நெய்வேலியைச் சேர்ந்த, வாசுகி வெற்றியரசு: என் மாமனார், 'காலேஜ் டிரை கிளீனர்ஸ்' என்ற கடையை, வேறொருவரிடம் இருந்து வாங்கி நடத்தி வந்தார்.அவருக்குப் பின், என்.எல்.சி.,யில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த என் கணவர், கடையை கவனிக்க ஆரம்பித்தார்; அவருடன் இணைந்து நானும் தொழிலை கற்றேன். சிறு அளவில் இருந்த கடையை, கணவரின் மறைவுக்குப் பின், பெரிதாக விரிவுபடுத்தினேன். இப்போது, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, விருத்தாச்சலம் என, பல மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் துணிகளை கொடுத்து, சலவை செய்து வாங்கி செல்கின்றனர்.

வெள்ளை சட்டைகள், தைத்த போது இருந்த அதே நிறம், ஐந்து ஆண்டுகளானாலும் மிளிர்வது போல் தருவதால், பல ஊர்களின் அரசியல்வாதிகளும், எங்கள் கடையை தேடி வருகின்றனர். சென்னையிலிருந்து வரும் பஸ்சில், காலை யிலேயே துணியை எடுத்து வந்து, மாலைக் குள் துவைத்து, இஸ்திரி போட்டு கொடுத்து விடுவோம்.

சலவையகத்தோடு நின்று விடாமல், 'கல்லுாரி நல வாழ்வு நிலையம்' என்ற பெயரில், இயற்கை அங்காடிப் பொருட்களை விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறேன். அறுகம்புல் பவுடர், ஆவாரம்பூ பவுடர், ஒற்றை இலை தாமரைப் பொடி, தேனில் ஊற வைத்த நெல்லி, முல்தானி மட்டி, செம்பருத்தி எண்ணெய், இயற்கை காய்கறி ஜூஸ் மற்றும் சுத்தமான கொல்லிமலை தேன்(எங்கள் கடை ஸ்பெஷல்) என, எங்களிடம் கிடைக்காத விஷயம் எதுவுமில்லை.

விலை உயர்ந்த புடவை கிழிந்து விட்டால், அதை தைத்தாலும் அந்த இடம், அப்பட்டமாய் தெரிந்து, மானத்தை வாங்கும். ஆனால், தைத்த இடம் தெரியாமல் ஆக்கும், 'டார்னிங்' எனப்படும், கை நெசவு செய்து தருகிறோம்.இதற்காக, கிழிந்த சேலையில் இருந்தே நுால் எடுத்து, கண்ணுக்கே தெரியாத அளவுள்ள ஊசியால், டிசைன் போட்டு, இஸ்திரி போட்டால், கிழிந்த இடமே தெரியாது. இதை சொல்வது சுலபம்; செய்வது பெரிய வேலை. நானும், என் தங்கையும் சேர்ந்து, இந்த வேலையை செய்து தருகிறோம். இங்கே வேலை செய்த பாட்டியிடம் இருந்து, இதை கற்று, செய்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, தையல், எம்பிராய்டரி உள்ளிட்டவற்றையும் செய்து கொடுக்கிறேன். என் மேற்பார்வையில், 15 பேர் வேலை செய்து வருகின்றனர்; இதில் பலரும் பெண்கள். என் சாதனைகளை பாராட்டிய சரஸ்வதி அறக்கட்டளை, சிறந்த தொழில் முனைவோர் விருதை, சமீபத்தில் வழங்கியுள்ளது.தொடர்புக்கு: 95006 31766
--தினமலர் நாளிதழிளிருந்து .

கீழ் வருவது விக்கிப்பீடியாவிலிருந்து (பொதுஅறிவிற்காக):

உலர் சலவை என்றால் என்ன?
 உலர் சலவையில் சாதாரண சலவை போன்றே துணிகள் துவைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு இஸ்திரி செய்யப்படுகிறது, ஆனால் தண்ணீருக்கு பதில் ட்ரைகுளோரோஈத்தேன், பெர்குளோரோஎத்திலீன், ஹைட்ரோகார்பன் மற்றும்  திரவ சிலிக்கான் மற்றும் கார்பன்டைஆக்சைட் போன்ற வேதி கரைப்பான்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

தற்செயலான கண்டுபிடிப்பு:
பல கண்டுபிடிப்புகளைப்போல உலர் சலவையும் தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டது. மண்ணெண்ணையில் விழுந்த துணிகளில் உள்ள அழுக்குகளும், கறைகளும் காணாமல் போயின. இதைக்கண்டே உலர்சலவை எண்ணம் தோன்றியது.

துணிகளில் அழுக்கு படிவதேன்?:
துணிகளில் அழுக்குப்படிவதற்குக் காரணம் எண்ணைப்பசைதான். உலர் சலவை செய்யும்போது துணிகளில் உள்ள எண்ணைப்பசை கரைக்கப்பட்டு அகற்றப்படுவதோடு அத்துடன் ஒட்டியுள்ள அழுக்கும் நீங்குகிறது.

உலர் சலவை முறை:
முதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால், டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர்.

வேதி கரைப்பான் அலசல் முடிந்து, 60 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் துணிகள் உலர்த்தப்படும் அப்போது துணிகளில் உள்ள கரைப்பான்களோடு சேர்த்து கறை மற்றும் அழுக்குகளும் ஆவியாகிவிடும், பின் இஸ்திரி செய்தால் துணிகள் தயார்.  துணிகளை அலசி, உலர்த்தும் வசதி ஒரே இயந்திரத்திலேயே இருப்பது கூடுதல் வசதி.  



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...