Saturday, 3 March 2018

கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்!

கொத்தமல்லி சாகுபடி செய்து வரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி - பேபி தம்பதி: எங்களுடைய, 9 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் கொத்தமல்லி, 1 ஏக்கரில், சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளோம்.பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் சரியாக கிடைக்காததால், 'போர்வெல்' போட்டுத் தான் பாசனம் செய்கிறோம். அதிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால், தென்னைக்கு பாய்ச்சியது போக மீதி நீரில், விவசாயம் செய்கிறோம்.
கொத்தமல்லித் தழை, 45 நாட்களில் அறுவடைக்கு வந்து விடக்கூடிய பயிர். அரை ஏக்கர் பரப்பில் விதைக்க, 4 கிலோ விதை தேவைப்படும். தேர்வு செய்த நிலத்தில், 3 டன் தொழு உரமிட்டு, உழுது, 10 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். பின், வீரிய ரகக் கொத்தமல்லி விதையை பாத்திகளில் சீராகத் துாவி, அவற்றை நீண்ட கூர்மையான குச்சியால், மண்ணைக் கீறி மூடி, உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த, 10 நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும். அப்போது, பாசனம் செய்து, ஈரம் காய்ந்தவுடன், களை எடுத்து, தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். இரண்டாவது முறையாக, 25ம் நாளில், களை எடுத்து, கடலைப் பிண்ணாக்கு மூழ்கும் அளவு தண்ணீர் நிரப்பி, மூன்று நாள் ஊற வைத்து, அத்துடன், தலா, 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து, கடலை பிண்ணாக்கு கரைசலை, பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

செடிகள், 30ம் நாள், நன்கு வளர்ந்துவிடும். அப்போது, வரும்முன் காக்கும் விதமாக, 10 லி., தண்ணீருக்கு, 100 மில்லி இஞ்சி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 45ம் நாளில், மாலை நேரத்தில் கொத்தமல்லி செடிகளை, வேருடன் பிடுங்கி, கட்டுகளாக கட்டி, நீரில் அலசி, மண்ணை நீக்க வேண்டும். நிழலில் அடுக்கி, ஈரத்துணியால் மூடி வைத்து, மறுநாள் விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.

அரை ஏக்கரில், 3,000 கிலோ கொத்துமல்லித் தழை கிடைக்கும். ஒரு கிலோ, 25 - 30 ரூபாய் வரை விற்றால், குறைந்தபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். விதை, நடவு, இடுபொருள் செலவு போக, 60 ஆயிரம் ரூபாய் லாபம் வரும். நாங்கள் நேரடியாகவே உழவர் சந்தையில் விற்பனை செய்வதால், தரகு கமிஷன் கிடையாது. கொத்தமல்லியை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் நாங்கள், அடுத்த முறை, சின்ன வெங்காயத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யவுள்ளோம். தொடர்புக்கு: 9688380579.
--தினமலர் நாளிதழிலிருந்து


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...