Friday 30 March 2018

சைக்கிள் உழவு கருவி

சைக்கிள் உழவு கருவி குறித்து கூறும், மானாவாரி விவசாயம் செய்து வரும், முனியசாமி: விருதுநகர் மாவட்டம், தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கல்லுாரி படிப்பை முடித்து, சென்னை, துணிக்கடையில் மேனேஜராக வேலை பார்த்தேன். அப்போது, வேலை இல்லாத சமயங்களில், இன்டர்நெட்டில் தகவல் தேடுவேன்.இப்படி, இன்டர்நெட் வீடியோக்களை பார்த்து, இயற்கை விவசாயம் மீது ஆர்வம் வரவே, வேலையை விட்டு, பண்ணையில் தங்கி பயிற்சி எடுத்தேன்.

அப்போது, சிவகாசியில் இருக்கும் இயற்கை விவசாய அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த விவசாயிகளிடம் பேசினேன். அவர்கள், மாதிரி பண்ணைக்கு அழைத்துச் சென்றனர்.அந்த பண்ணையிலேயே பராமரிப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், அவரின் இந்த, 1 ஏக்கர் நிலத்தை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதில் தான், மானாவாரி விவசாயம் செய்து வருகிறேன். இது, மணல்சாரியான கரிசல் மண். போன போகத்தில், இயற்கை முறையில் குதிரைவாலி சாகுபடி செய்தோம். இந்தாண்டு, துவரை, தட்டை, இருங்குச் சோளம், குதிரைவாலி என, நான்கு பயிர்களை, சைக்கிள் உழவுக் கருவியை பயன்படுத்தி, விதைத்தேன். விதைப்போடு களை எடுத்தல், மண் அணைத்தல் என, மற்ற வேலைகளையும் செய்து கொண்டேன்.

 இந்த கருவி மூலமாக உழவு, களை எடுப்பு இரண்டும் சேர்த்து, 1 ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மிச்சமானது. இந்த கருவியை உருவாக்க, பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு, பெடல் இருந்த இடத்தில், ஒரு இரும்புப் பட்டையை வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும்.அதில் கொழுவை, போல்ட், நட் வைத்து இணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இரண்டு, மூன்று கொழுக்கள் கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.களை எடுக்க, நான்கு பல் கொண்ட கருவியை செய்து வைத்துக் கொள்ளலாம். உழவுக்கும், விதைப்புக்கும் ஒற்றை கொழுவை பயன்படுத்த வேண்டும். சீட் இருந்த இடத்தில் கைப்பிடியைப் பொருத்தி, சைக்கிளை முன்னோக்கி தள்ளும்போது, டயர் சுழல சுழல, கொழு மண்ணை கிளறிவிடும்.

சாதாரணமாக, அரை அடி ஆழமும், மண் பதமானதாக இருந்தால், முக்கால் அடி வரையும் கொழு இறங்கும். இக்கருவி மூலம் களை எடுக்கும்போது, களைகள் வேரோடு வந்து விடுகின்றன.தெரிந்த விவசாயி களிடம் விதை வாங்கினால் தரமாக இருக்கும் என நம்பி, பலரும் வாங்குகின்றனர். ஏதாவது ஒரு பயிர் கை கொடுக்கும் என நினைத்து தான், நான்கு பயிரை கலந்து போட்டேன். ஆனால், நான்குமே நன்றாக விளைந்துள்ளன.தொடர்புக்கு: 9655051239.

--தினமலர் நாளிதழிலிருந்து

சைக்கிள் உழவு கருவி - பசுமை தமிழகம் விவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...