Sunday, 5 August 2018

பேரீச்சை சாகுபடி:

பேரீச்சை சாகுபடியில் அதிக லாபம் சம்பாதிக்க வழி கூறும், தருமபுரி மாவட்டம், அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின்: சவுதி அரேபியாவில், வேளாண் பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த போது, பேரீச்சை சாகுபடி குறித்து அறிந்தேன்.நம் ஊரில் செய்தால் என்ன என யோசனை வந்து, அங்கிருந்த பேரீச்சை நாற்றை எடுத்து வந்து, சொந்த ஊரில் நட்டேன். 1991ல், பேரீச்சை சாகுபடியை துவங்கினேன்.

தற்போது, 1 ஏக்கருக்கு, 76 செடி வீதம், 13 ஏக்கரில், 630 பேரீச்சை செடிகளை நட்டு, பராமரித்து வருகிறேன். 24க்கு, 24 அடியில், ஒரு செடி நட வேண்டும். குழியின் அடியில், 1.5 அடி வரை, மணல் கலந்த மண்ணையும், மேல் பாகம், 1.5 அடியில் மண்ணையும், இயற்கை உரங்களையும் கலந்து நடவு செய்ய வேண்டும். இது, அனைத்து வகையான மண் ரகத்திலும் வளரும் தன்மையுடையது. நடவு செய்து ஒரு மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்து, வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். மரங்களான பின், மாதத்திற்கு இரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில், தென்னையை போல், பேரீச்சை மரம் காய்ந்து போக வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு இருமுறை, இடை உழவும், இருமுறை இயற்கை உரங்களும் போட வேண்டும். பேரீச்சை மரங்கள், 90 ஆண்டு வரை பழங்கள் தரும். இதன் ஆயுட்காலம், 150 ஆண்டு. இதன் நடுவே ஊடுபயிராக, அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.நடவு செய்த முதல் ஆண்டில், ஒவ்வொரு செடியும், 30 - 50 கிலோ வரையும், மூன்றாம் ஆண்டு பருவத்தில், 50 முதல் 100 வரை காய்க்கும். பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரியில் பூ பூத்து, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தரமான, சுவையான பழங்களை அறுவடை செய்யலாம்.

மரத்தை சுற்றி விளையும் களைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரம் வளர்ந்த பின், பக்கவாட்டில் உள்ள கிளைகளை வெட்டி விடுவதுடன், காய்க்க துவங்கியதும், வலைகளால், பழங்களை மூடி விட வேண்டும்; இல்லையெனில் எலி, அணில்கள், பழங்களை சேதப்படுத்தி விடும். எங்களிடம், 32 வகையான பேரீச்சை நாற்றுகள் உள்ளன.

ஒரு நாற்றின் விலை, 3,500 - 5,000 ரூபாய் வரை விற்கிறோம். பழங்கள் கிலோ, 250 - 500 ரூபாய் வரை விற்கிறோம். தற்போது, நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயமும் படிப்படியாக குறைகிறது. வழக்கமான விவசாயத்தை விட, குறைந்த செலவில், பேரீச்சை சாகுபடியில் அதிக பலன்களை பெற முடியும். தொடர்புக்கு94423 37717.
--தினமலர் நாளிதழிலிருந்து.

 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...