Thursday, 18 May 2017

கதைகள்:

வாழ்வை கட்டமைக்கும் சிறந்த அடித்தளத்தை உருவாக்குவதில் கதைகளுக்கு முக்கிய பங்குண்டு. கதைகள் நம் மொழி, உணவு, கலாசாரம், நல்லது, கெட்டதுகளை கடத்த உதவும் ஒரு சாதனம், ஒரு வாகனம், ஒரு ஊடகம், ஒரு பாலம். மனத்தில் பதியும் வயதில் சொல்ல வேண்டிய நல்ல விஷயங்களை சொல்லி பிள்ளைகளை வளர்த்தால் என்றுமே பிள்ளைகளை நினைத்து நாம் கவலை பட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகளிடம் நற் சிந்தனை, மூளை வளர்ச்சி மற்றும் கற்பனை திறனை வளர்க்கும் சக்தி படைத்தவை கதைகள். 
சிந்தனையை தூண்டும் கதைகளை கேட்டோ வாசித்தோதான் சான்றோர், எழுத்தாளர்கள், படைப்புலகில் உள்ளவர்கள், மேதைகள் அந்நிலையை அடைந்திருப்பார்கள். வெறுமனே கதைகளை சொல்லி நிறுத்தாமல் முடிவில் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நல்ல சமுதாயம் உருவாக பாட்டி/ தாத்தாகளும், நல்ல கதைகளுமே போதுமானது என்பதே என் எண்ணம். எனக்கு பிடித்த இரண்டு கதைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சிந்தனை செய் மனமே:


ரு அழகான, பசுமையான, அமைதியான தேசம் நதியின் ஒரு கரையிலும், மக்கள் வாழாத கொடிய விலங்குகளுடன் கூடிய அடர்ந்த காடு நதியின் மறு கரையிலும் உடைய நாடு ஒன்று இருந்தது. சில நிபந்தனைகளுக்கு பின்னரே அந்த நாட்டை ஆளும் அரசன் தேர்ந்தெடுக்கப்படுவான், அதாவது குறிப்பிட்ட ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின் அந்த அரசன் ஊருக்குள் வாழ கூடாது நதியின் மறு கரையில் உள்ள காட்டில் தான் வாழ வேண்டும்.

இந்த பிரச்சனைக்கு (எதிர்கொள்ள) பயந்து பலர் அரசனாக முன்வரவில்லை, சிலர் அரசனாக இருக்கும் வரை லாபம் அதன் பிறகு என்ன வந்தாலும் வரட்டும் என்று அரசனாகி காட்டிற்க்கு பயத்துடன் சென்று அங்கு துன்பபபட்டு இறந்தும் போனார்கள்.இப்போது ஒரு அரசனின் ஆட்சி காலம் முடிவுற்று காட்டிற்கு செல்ல வேண்டிய நேரம், மக்கள் அனைவரும் கூடிவந்து அரசனை ஒரு படகில் ஏற்றி அக்கரைக்கு அனுப்பி வைத்தனர். 

படகோட்டியும் அரசனும் மட்டும் படகில் சென்றுகொண்டிருந்தனர், அந்த படகோட்டிக்கு ஒரே ஆச்சரியம் இதுவரை வந்த ராஜாக்கள் அனைவருமே பயந்து போய் தான் வருவார்கள் ஆனால் இவரோ மகிழ்ச்சியாக காணப்பட்டார்.  படகோட்டியும் அரசனிடம் காரணத்தை கேட்டுவிட்டார். 

"நிச்சயம் அங்குப் போக போகிறேன் என்று தெரியும் அதனால் ஆட்சியில் இருக்கும் போதே ஆட்களை அனுப்பி அங்கு ஒரு அரண்மனை கட்டிவைத்து பணியாட்களையும் பணியில் வைத்து விட்டேன் அதனால் தான் மகிழ்ச்சியோடு செல்கின்றேன்" என்றான் அரசன்.

நிச்சயம் ஒரு நாள் நாம் மூப்பெய்த போகிறோம் அந்த நாட்களை  முன்பே அழகாக மாற்றினால் என்ன?


பிறருக்கல்ல நமக்கே:

ரு ராஜா. அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப் பின் யார் நாட்டை ஆள வேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார். 

‘காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக் காட்டத் தேவையில்லை’ என உத்தரவிட்டார். 

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல்பட்டுக் கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப் போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான். 

மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ, "நீங்கள் இதை கொடுக்க வேண்டிய அந்த ஏழைகள் வேறு யாருமில்லை. நீங்கள்தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள்" என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார். 

நல்ல பழங்களை கொண்டு வந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
(இயக்குனர் பேரரசு சொன்ன கதை)
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

 








No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...