Wednesday 29 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 4

ரசித்தவை: கரை ஏறி பொருட்களை வைத்த இடத்திற்கு வந்து துவட்டிக்கொண்டு ஈரம் காய்ந்த பிறகு உடை மாற்றி பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தவர்க்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். உச்சி வெயில் மண்டையை சூடாக்கி கொண்டிருந்தது, சர்பத் குடித்ததற்கு காசு கொடுக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. அவரை தேடி கண்டுபிடித்து பணத்தை கொடுத்து நடையை தொடர்ந்தேன். இவ்வளவு நேரமும் நானிருந்தது ஆற்றின் நடு பகுதிதான், 800மீ நடந்து வந்திருப்பேன், ஆற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது அதன் சுற்று பகுதியில் நிறைய கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் 15 ரூபாய்க்கு பூரி கிழங்கும் டீயும் சாப்பிட்டபின்தான் தெம்பே வந்தது மணி மதியம் 1.30.

நல்ல விஷயம் என்னவென்றால் மண் குவளையில் டீ கொடுக்கப்பட்டதுதான், கொல்கத்தாவிலும் அநேக இடங்களில் இப்படித்தான் கொடுக்கப்படும். கையில் பிடிக்கும் போது அவ்வளவு சூடாக இருக்காது, விரைவில் ஆறிவிடும், உதட்டில் சூடு படுவது இருக்காது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்காது. அடுத்து அலஹாபாத் சிட்டி ஸ்டேஷனிலிருந்து வாரணாசி செல்லும் திட்டத்துடன் ஒரு ரிக்சாவில் ஏறினேன், இந்த ஊரில் ரிக்சாக்கள் மிக அதிகம். இந்த ரிக்சாக்களின் மணி வித்தியாசமாக, அதாவது பிரேக் பிடித்தால் மணி அடிக்கும் விதமாக இருந்தது.

     
(http://www.nextstopwhoknows.com/india-photo-series/)(http://www.denizenreport.com/wp-content/uploads/2014/03/RICKSHAW_EDIT_LR.jpg)

ரயில் தாமதம்: ரிக்சாவாலா அரைமணிநேரத்தில் கொண்டுவந்து என்னை இறக்கி விட்டார், 3.15 மணிக்கு காசி செல்ல டிக்கெட் எடுத்து நடைமேடை வந்தேன். 3.30 க்கு வர வேண்டிய வண்டி 4 மணிக்கு தான் என்ற அறிவிப்பு வந்தது. நிலையத்திற்கு வெளியில் போய்வரலாம் என்று வந்து பார்த்தபோது நிறைய கொய்யாப்பழங்கள் இருந்தது அவற்றில் 2 வாங்கி சாப்பிட்டுவிட்டு சிறிது உலாத்திவிட்டு மீண்டும் உள்ளே வரும்போது மணி 3.45, மீண்டும் ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு. அரைமணி நேரம் தாமதத்தை அடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, எப்படியாவது காசி சென்று விட வேண்டும் என்று நடைமேடையிலேயே காத்திருந்தேன். வெயில் முற்றிலுமாக மறைந்து பணிப்பெய்ய ஆரம்பித்திருந்தது. கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருந்தனர், சாமியார்கள், சம்சாரிகள், வியாபாரிகள் என்று பலரும் அந்த ரயிலுக்காக காத்திருந்தனர். 

மன மாற்றம்: பல விதமான எண்ணங்கள் மற்றும் விடை காணமுடியாத கேள்விகள் வந்துபோன வண்ணம் இருந்தது. மணி இப்போது 6. ரயில் இன்னும் வரவில்லை, எனக்கோ மனம் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தது, காசி போயேத்தான் ஆக வேண்டுமா? அல்லது காத்திருந்து போவதா? சில போராட்டங்களுக்கு பின் "காசி போக, வேண்டாம் இன்றே ரயில் பிடித்து ஹவுரா செல்லலாம் பிறகு அங்கிருந்து விமானத்தில் குவாஹாத்தி செல்லலாம்" என்று முடிவெடுத்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன், எதிரில் இருந்த கடையில் ஒரு டீ குடித்துவிட்டு ரிக்சாவில் ஏறி அலஹாபாத் ஜங்சன் செல்ல சொன்னேன். அலஹாபாத் தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தேன், அழகான தெருக்கள், கட்டிடங்கள் புகை காக்கும் ஆட்டோ ரிக்சா இல்லை. தெருவில் அநேக இடங்களில் உணவு பந்தல்கள் இருந்தது, அனைத்தும் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கான அன்னதான பந்தல், வருபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்தான். 

அன்னதானமும் சூழல் கேடும்: உண்மையில் இந்த பந்தல்கள் நல்ல விஷயம்தான், ஆனால் கொடுக்கப்படும் பொருட்கள் பிளாஸ்டிக் தட்டுகளில் கொடுக்கப்பட்டதுதான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, ஒரு வகையில் தானம் தான் என்றாலும் அது உண்டுபண்ணும் கழிவுகள் மிக அதிகம். சில இடங்களில் காய்ந்த இலைகளை தட்டுபோல் செய்து அதில் கொடுத்தார்கள். பூரிக்கிழங்கு, ரொட்டி, சாம்பார்சாதம், தண்ணீர்  என ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு வகை. என்னை கூட்டி சென்ற ரிக்சாகாரர் ஒரு பந்தலில் நிறுத்தி "சாப்பிட்டு செல்லலாமா?" என்று கேட்டார், சரி என்றதும் இறங்கிப்போய் அவருக்கு ஒரு தட்டும், நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு ஒரு தட்டு பூரி கிழங்கும் வாங்கிவந்துவிட்டார். பூரி நன்றாகத்தான் இருந்தது. 6.30 க்கு ஜங்சன் வந்துவிட்டேன்.

 (https://www.flickr.com/photos/30120194@N02/4260065599)

இரவு தங்குதல்: பின் பக்கம் வழியாக ரயில் நிலையத்திற்குள் சென்றேன், பயண சீட்டு வழங்க சிறப்பு counterகள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமிருந்ததால் காவல்துறையின் கண்காணிப்பும் வலுவாக இருந்தது, குண்டு கண்டறியும் கருவி, மோப்ப நாய்கள், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் காவலர்கள் என எதையும் சமாளிக்கும் நிலையில் காவல்துறையினரின் செயல்பாடு இருந்தது. அங்கும் இங்கும் அலைந்து பார்த்தும் ஹவ்ரா செல்லும் ரயிலின் பெயரும் காலமும் தெரியவில்லை எனவே ஹிந்தி ரயில் வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அத்தனை முறை புரட்டிப்பார்த்ததில் இன்று இரவே கிளம்புவதற்கு ரயில் கிடையாது அடுத்த நாள்தான் கிளம்ப முடியும் என்று தெரிந்தது. என்னிடம் உறுதி செய்யப்பட்ட பயணசீட்டு கிடையாது, நடை மேடை சீட்டு எடுத்தாலும் இரவு முழுதும் ரயில்நிலையத்தில் தங்க முடியாது. ஹோட்டலில் தங்கலாம் என தீர்மானித்து நிலையத்தை விட்டு வெளிவரும்போது இரவு மணி 8. 

15 நிமிட நடைக்குப்பின் ஒரு நல்ல ஹோட்டல் இருந்தது ஆனால் அறைகள் காலி இல்லை. அந்த சமயத்தில் உள்ளூர்காரர் ஒருவர் நான் அறை தேடுவதை தெரிந்துகொண்டு ஒரு இடத்தை காட்டி அங்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதே போல் அங்கு சென்று கேட்டேன் இடம் கிடைத்தது. அது ஒரு சின்ன கட்டிடம் மொத்தம் 10 கட்டில்கள், ஒரு கட்டில் மட்டும் 3 அடுக்குடன் இருந்தது, அதில் மூன்றாவது அடுக்கில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது, ஒரு இரவுக்கு 200 ரூபாய். 10 பிப்ரவரி 2013 காலை 6 மணிக்கு விழித்தெழுந்தேன் நல்ல உறக்கம். 6.30 மணிக்கு கிளம்பி மீண்டும் த்ரிவேணிசங்கம் செல்ல எண்ணினேன். நேற்றை விட இன்று மக்கள் கூட்டம் சாலையில் மிக அதிகமாக இருந்தது. 

மீண்டும் திரிவேணி சங்கம்: ஆற்றை நோக்கி செல்லச் செல்ல கூட்ட நெரிசலும் அதிகரித்து கொண்டே சென்றது. 5 கிமீ வந்துவிட்டேன் இன்னும் 2 கிமீ சென்றால் ஆறு வந்துவிடும், ஆனால் எனக்கோ "உள்ளே சென்று வெளிவர முடியுமா?" என்ற சந்தேகம் வரவே, ரயில் நிலையம் சென்று ஹவ்ரா செல்வது என்ற முடிவுடன் திரும்பி வர ஆரம்பித்துவிட்டேன். 4 கிமீ வந்த பிறகு மிகவும் கலைப்படைந்துவிட்டேன், பயணசீட்டு உறுதியாகவில்லை எவ்வாறு செல்ல போகிறோமோ? என்ற கவலையும் சேர்ந்து "ஏன்தான் இங்கு வந்தோமோ?" என்று தோன்றவைத்துவிட்டது. கான்பூர் சென்று அங்கிருந்து செல்லலாம் என்றாலும், காத்திருந்து பயணசீட்டு எடுத்து செல்ல 4 மணிநேரம் ஆகிவிடும், எனவே ஒரே வழி அலஹாபாத் நிலையம் சென்று பொது வகுப்பு பயணசீட்டு வாங்கி செல்வதுதான், இந்த முடிவில் உறுதியுடன் ரயில்நிலையம் நோக்கி நடந்தேன்.



1 comment:

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...