Tuesday, 16 October 2018

தியானம்:

தியானம்,   நமக்குள் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு அற்புத பயணம். புறம் நோக்கி ஓடும் ஆற்றலை தடுத்து அகம் நோக்கி திருப்பி, உலகத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சலனங்களிலிருந்து நம்மை பாதுகாத்து, நமது நோக்கத்தை தெளிவுபடுத்தி நம்மை உற்சாகத்துடன் பயணிக்க வைக்க உதவும் சக்தியை  தருவது தியானம்.


 நமது உடலானது காற்று, நீர், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றின் மூலமாக ஆற்றலை பெறுகின்றது. இப்படி பெறப்பட்ட ஆற்றலை நாம் எப்படி செலவிடுகிறோம்?.....இந்த செலவிடும் தன்மை எதை பொறுத்தது?

ஆற்றலை செலவிடும் தன்மை அவரவர் மனதை பொறுத்தது. மனம் ஒரு நிலையில் இல்லையென்றால் ஆற்றல் விரயம் அதிகமாக இருக்கும், நோக்கத்தில் தெளிவு இருக்காது, செய்யும் செயல்கள் முழுமை பெறாது முடிவாக சலிப்பே எஞ்சி நிற்கும்.

ரூபமான பொருள் போல கண்களுக்கு புலப்பட்டால், மனதை நாம் கட்டுப்படுத்தும் சாத்தியம் உண்டு. ஆனால் மனமோ அரூபமானது, கட்டுக்குள் வராதது, அடங்காதது, நிலையில்லாதது, சக்தி வாய்ந்தது, எதையும் தரவல்லது, இறைவனையும் காட்ட வல்லது.....கொடூரத்தின் உச்சத்தையும் காட்ட வல்லது....இவ்வளவு ஏன் நம்மை ஏமாற்றியவர்களின் பட்டியலை தயாரித்தால் அடுத்தவர்களை எல்லாம் பின்னுக்கு அல்ல.....பாதாளத்திற்கே  தள்ளி முதலிடம் பிடிப்பது நமது மனம் தான்.

இப்படிப்பட்ட அளவற்ற சக்தியை கொண்ட மனதை அடக்க அல்லது நமது நோக்கத்திற்கு பயன்படுத்தி நம்மை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல ஒரு சக்தி உண்டென்றால் அது தியானம் மட்டும்தான்.

மனதை செப்பனிட்டால் அது ஒரு வடிவம் பெறுகிறது, நாம் பெற்ற ஆற்றலை முறையாகவும், விழிப்புணர்வுடனும் செலவிட மனம் ஒரு கருவியாக மாறும். நேரடியாக மனதை வென்றுவிட முடியுமா?... முடியாது; தியானம்தான் நம் மனதை நாம் விரும்பியபடி அழைத்து செல்ல உதவும் ஒரு ஒப்பற்ற கருவி; மாட்டின் மூக்கில் போடும் மூக்கு கயிறு போல....

நாள் முழுதும் எண்ண சிதறல்களோடு வேலைசெய்து, நாளின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ எண்ணத்தை குவித்து தியானம் செய்வதின் பலன் மிக குறைவே. ஜென் தத்துவம் போல.... ஒவ்வொரு செயலிலும் தியானத்தில் ஈடுபடுவதுபோல் ஈடுபட்டால் பிறகு வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும்.

தியானத்தின் பயன்களாக இவற்றை குறிப்பிடுகிறார் பாரதியார் .....

* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.

* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.

* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.

* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.

Unwavering Focus | Dandapani | TEDxReno
Dhiyanam (Tamil) Paperback – 2008 by K S Ilamathi (Author)
தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தியானம் செய்வது எப்படி ஒரு எளிமையான விளக்கம்:
முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்
தியானம் செய்தால் என்ன கிடைக்கும்?



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...