Saturday 13 October 2018

'ஹேண்ட் இன் ஹேண்ட்' : இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும் அமைப்பு

இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' அமைப்பின், இயற்கை விவசாயப் பயிற்சித் திட்ட மேலாளர், முனைவர், ஜோ: எங்கள் அமைப்பு, 'ஹீமேனியம்' நிறுவனத்துடன் இணைந்து, விவசாயப் பண்ணையை அமைத்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது, இரண்டு ஆண்டுத் திட்டம். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமம் முழுவதும், களர் மண் நிலங்கள் தான் உள்ளன. வளம் குறைந்த மண்ணிலும், இயற்கை விவசாயம் சாத்தியமே என்பதை நிரூபிக்கவே, இக்கிராமத்தை தேர்ந்தெடுத்தோம்.

பண்ணையில் பயிற்சிக்காக, 0.5 ஏக்கரில், கோ - 4 புல், அவரைக்காய், பீர்க்கங்காய், பாகல், அரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, சிறுகீரை, தக்காளி, பீன்ஸ், தட்டைப்பயறு, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம்.மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல், இஞ்சி பூண்டுக் கரைசலை தயாரிப்பதுடன், 'கம்மல் பாசி' என்று அழைக்கப்படும், அசோலா வளர்ப்புக் கூடத்தையும் அமைத்துள்ளோம். இதை விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்.

 'மாதிரி பண்ணை அமைத்துள்ள நிலத்தில் ரசாயனம் போட்டாலே ஒன்றும் விளையாது. இயற்கை விவசாயத்தில் என்ன விளையப்போகுது?' எனக் கூறித்தான், இதன் உரிமையாளர், குத்தகைக்கே கொடுத்தார். இப்போது, இயற்கை முறை சாகுபடியில் விளைந்து நிற்கும் பயிர்களை பார்த்து, நிறைய விவசாயிகள் பயிற்சிக்காக வர ஆரம்பித்துள்ளனர்.இயற்கை விவசாயத்துடன், விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இயற்கை விவசாயம் சிறப்பாக செய்யும் விவசாயிகளுக்கு, 15 நாட்டுக்கோழி, ஆடுகளை கொடுக்க இருக்கிறோம். நாங்கள் தரும் நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளுடன், அவர்கள் பணம் கொடுத்து, ஐந்து நாட்டுக்கோழி, இரண்டு ஆடுகளையும் வாங்க வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் அவர்கள், அதை நிலையாக வைத்திருப்பர்.

விவசாயிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரே மந்திரம்,  'நிலத்தில் இடப்படும் இடுபொருட்கள் எதையும் வெளியில் இருந்து வாங்கக் கூடாது; முடிந்தவரை அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்ய வேண்டும்' என்பது தான். அதேபோல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

விவசாயிகளை தற்சார்புள்ளவர்களாக மாற்ற, இயற்கை விவசாயம் ஒன்றே வழி என்பதை, அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். விரைவில் இக்கிராமத்தை, முழு இயற்கை கிராமமாக மாற்றிவிடுவோம். தொடர்புக்கு: 92822 13702.
--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...