Sunday 30 September 2018

முதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து!

முதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த ஊர், சென்னை. இப்போது நாங்கள், பெங்களூரில் வசித்து வருகிறோம். வயதான காலத்தில், என் பெற்றோர் எதிர் கொள்ளும் அவஸ்தைகளை பார்த்தவள் நான். தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும், சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, யாருமற்ற தனிமை தரும் மன அழுத்தமே, அவர்களை வாட்டும், முதல் நோய். அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்தாக, தங்கள் வயதினருடன் உரையாட, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தான் என, உணர்ந்தேன்.

கடந்த, 2014ல், புனேயில் வசிக்கும் என் தோழி, ரேஷ்மியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும், பயனுள்ளதாக இருந்ததாக மனதாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, இணையதளத்தை துவங்கினோம். அதன் மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து, நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் கூடி, தங்கள் உணர்வுகளைப் பகிரவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழி செய்தோம்.

'ரோட்டரி கிளப்'புக்கு சொந்தமான நுாலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை, சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல், உடல், மன உபாதைகள் வரை, முதியோரின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில், கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை, 8,000க்கும் மேற்பட்டோர், இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக, ஆண்டிற்கு, 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தை, இலவச சேவைகளுக்காக பயன்படுத்தி கொள்கிறோம்.

சென்னை உட்பட, பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணி உள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர், முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கி இருக்கின்றனர்; இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்.
--தினமலர் நாளிதழிலிருந்து


தொடர்புடைய பதிவுகள்:
புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...
உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....
வேலை செய்து வந்தால்.....

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...