Friday 26 January 2018

சரும ஆரோக்கியம்..... முழு ஆரோக்கியம்.

அழகுக்கலை நிபுணரும், அரோமாதெரபிஸ்டுமான கீதா அசோக்: 'அழகு என்பது ஆற்றல்; புன்னகை என்பது ஆயுதம்' என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்த துவங்கினாலே, முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்.


முகம் பளிச்சிட:
  • வெதுவெதுப்பான பாலில், கசகசா ஒரு டீஸ்பூன், தோல் எடுத்த இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து, விழுதாக அரைத்து, முகத்தில் பூச, நிறம் மிளிரும். 
  • சிலருக்கு சருமம் உலர்ந்து, சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், மிகுந்த எண்ணெய் பசையுள்ள, 10 வால்நட்களை, சூடான பாலில் ஊற வைத்து விழுதாக அரைத்து, அதில், ரோஸ் ஆயில், 50 சொட்டு கலந்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். இதை, சிறிது எடுத்து முகத்தில் தினமும், 'ஸ்கிரப்' செய்வது போல் தேய்த்தால், இறந்து உலர்ந்து போன செல்கள் நீங்கி, முகம் பளிச்சிடும்.
  • தலா இரண்டு உருளைக்கிழங்கு, பாகற்காயை துருவி, வெயிலில் சருகாக நன்கு காய்ந்ததும், மிக்சியில் பொடித்து சலிக்க வேண்டும். அதில், பாதி பங்கு அரிசி மாவு கலக்கவும். வாரம் இருமுறை, இந்த பொடியுடன் மோர் கலந்து முகத்தில், 'பேக்' போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்; சுருக்கங்கள் வராமல், சருமம் இறுகும். 
  • பன்னீர் திராட்சையை, கொட்டையுடன் மிக்சியில் அடித்து, காற்று புகாத டப்பாவில் வைத்து, அவ்வப்போது முகம், கழுத்தில் தேய்த்தால், சருமம் தகதகக்கும். 
  • கனிந்த வாழைப்பழ தோலில், சிறிதளவு சர்க்கரை துாவி முகத்தில் தேய்த்தால், 'பேஷியல்' செய்த மாதிரி சருமம் மின்னும். 
கைகளுக்கு...:
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து, கைகளில் தடவி, 'மசாஜ்' செய்து குளித்து வந்தால், கைகளின் நிறம் மேம்படும். 
குழந்தையின் சருமத்திற்கு:
  • மஞ்சள் பூசணிக்காயின் சதைப்பகுதியுடன், பால் சேர்த்து அரைத்து, அதில், ஆவாரம்பூ பொடியை கலந்து, குழந்தையின் உடலில் பூசி, சிறிது நேரம் கழித்து தேய்த்து குளிப்பாட்டி விட, குழந்தையின் சருமம் பொலிவுறும்.
கண்கள் பளிச்சிட:
  • தாமரை இதழ்களை, விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். தினமும், இந்த விழுதை, கண்களை சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், கண்கள் பளிச்சிடும்; கருமை மறையும்.
உதடு கருமைக்கு:
  • பீட்ரூட் சாற்றில் சிறிது கிளிசரின், தேன், எலுமிச்சை எண்ணெய் ஐந்து சொட்டு கலந்து, பஞ்சில் தொட்டு ஒற்றி எடுத்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏழே நாளில் சருமம் ஜொலிக்கும்!

சருமத்தில் மாற்றத்திற்கு, 'டிப்ஸ்' கூறும், பியூட்டிஷியன், ஷீபா தேவி: அடிப்படையான சரும ஆரோக்கியமே, அழகுக்கு அஸ்திவாரம்.
முதல் நாள் காலை, வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சை ஜூஸ், காலை உணவுக்கு பின், ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்த ஜூஸ், மதிய உணவுடன், ஒரு ஆப்பிள், இரவு உணவுக்குப் பின், சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் சாப்பிடலாம். தலா அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி துாங்கலாம்.
இரண்டாம் நாள் காலை, தேன் கலந்த கிரீன் டீ, உணவுக்குப் பின், தக்காளி ஜூஸ், மதியம், சோயா பீன்சை சுண்டல் அல்லது பொரியல், இரவு, சர்க்கரை சேர்க்காத பால் சாப்பிடலாம். அரிசி மாவு, தயிர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
மூன்றாம் நாள் காலை, புதினா சேர்த்து கொதிக்க தண்ணீரை வடிகட்டி, அதில் எலுமிச்சைச்சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். உணவுக்குப் பின், வாழைப்பழம், மதியம், கிவி ஜூஸ், இரவு, செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழம், ஊறவைத்த பாதாம் விழுது சேர்த்து, முகத்தில் தடவி கழுவலாம்.
நான்காம் நாள் காலை, கேரட், பாதாம், தேங்காய் பால் சேர்த்து அரைத்தும், உணவுக்குப் பின், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், தேன் சேர்த்து குடிக்கலாம். மதியம், ஆரஞ்சுப் பழம். இரவு, பாதாம், குங்குமப்பூ, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து குடிக்கலாம். பாலில், குங்குமப்பூவை கரைத்து, ஆலிவ் ஆயில் கலந்து தடவி கழுவலாம்.
முதல் நாள் இரவே, ஒரு கப் தண்ணீரில், அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கறுப்பு உலர் திராட்சை மற்றும் மூன்று ஆல்பகோடா பழம் ஊற வைத்ததை, ஐந்தாம் நாள் காலை குடிக்கலாம். உணவுடன் தக்காளியை பச்சையாகவும், மதியம், 'டார்க் சாக்லேட்' கொஞ்சம் சாப்பிடலாம். இரவு, பப்பாளி சாப்பிடலாம். கற்றாழை ஜெல்லுடன், கெமிக்கல் கலக்காத பன்னீர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஆறாம் நாள் காலை, இனிப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ், உணவுடன் ஒரு கப் அன்னாசிப் பழம், மதியம், அரிசி உணவு தவிர்த்து கேழ்வரகு அல்லது ஓட்ஸ். இரவு, மாதுளம் சாப்பிடலாம். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஏழாம் நாள் காலை, குங்குமப்பூ, தேன் சேர்த்த பால், உணவுக்குப் பின், பப்பாளி ஜூஸ், மதியம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவகாடோ ஜூஸ், இரவு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் சாப்பிடலாம். முட்டை வெள்ளைக் கருவுடன், தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவலாம். காபி, டீயை நிறுத்தி, வெறும் வயிற்றில் மற்றும் காலை, மதியம், இரவு உணவுக்கு பின், ஏழு நாட்களுக்கு இதைத் தொடர்ந்தால், சருமம் ஜொலிக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...