Tuesday, 15 May 2018

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி:

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்ற வழி கூறும், திருவாரூர் மாவட்டம், வீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனன்: தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.


எங்கள் அப்பா காலத்தில், கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும். சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.

ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை. உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.


அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும். கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.


சணப்பு, தக்கைப்பூண்டு மாதிரியான பயிர்கள், வறட்சியை தாங்காது. அது மட்டுமின்றி இந்த பயிர்களை, 50 நாட்களில் மடக்கி உழவு செய்யாவிட்டால், தண்டு பகுதி கடினமாகி, நார்த்தன்மையாக மாறிவிடும்; அதனால், மட்க தாமதமாகும்.ஆனால், கொழிஞ்சியை பல மாதங்கள் நிலத்திலேயே விட்டு வைத்தாலும், நார்த்தன்மைக்கு மாறாது. வறட்சியிலும் வளரும் பயிர் என்பதால், கோடை காலத்தில் கூட கொழிஞ்சியை விதைத்து, உயர் மூடாக்கை உருவாக்கலாம்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

Saturday, 12 May 2018

ஞாபக சக்தி வலுப்பெறுகிறது "ஓய்வினால்" - ஆராய்ச்சி முடிவுகள்.

நாம் மிக விரும்பி செய்தாலொழிய, சில செயல்கள் (படித்தது, பார்த்தது, கேட்டது, பேசியது, கற்றுக்கொண்டது) செய்த சிறிது நேரத்திற்குப் பிறகு அதிலிருந்து சில விஷயங்கள்தான் நம் நினைவில் இருக்கும், ஆனால் திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வதன் மூலமும் ஞாபக சக்தியை வலுப்படுத்த முடியும், இது இயல்பானதுதான்.

ஹெரியோட்-வாட் (Heriot-Watt) பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறதென்றால், "ஏதாவது கற்றுக்கொண்ட  பிறகு தொடர் இயக்கத்தில் (busy) இல்லாமல் சிறிது நேர அமைதி அல்லது ஓய்வு எடுப்பது சிறு சிறு தகவல்களையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளும் திறனை அதிகப்படுத்துமாம்".

ஓய்வு:
புதிதாக ஏதாவது கற்றுக்கொண்ட பிறகு பத்திலிருந்து பதினைந்து (10-15) நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நமது ஞாபக திறனை வளர்ப்பதோடு எளிதில் ஞாபகத்திலிருந்து நினைவு கூறவும் மற்றும் நுணுக்கமான தகவல்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். இளைஞர்களை வைத்து நடத்திய "புகைப்படங்களின் வித்தியாசத்தை கண்டறியும் சோதனை"யின் முடிவே மேற்சொன்ன தகவல்.

சோதனை:
இளைஞர்களை இரண்டு பிரிவாக பிரித்து, ஒரே புகைப்படத்தை காண்பித்து ஒரு பிரிவு இளைஞர்களை பதினைந்து (15) நிமிடம் ஓய்வு எடுக்கச் சொல்லியும் மற்றொரு பிரிவினரை வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் படியும் செய்து மீண்டும் அவர்களிடம் பழைய புகைப்படத்தை ஒத்துள்ள, ஆனால் நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட புதிய புகைப்படம் காட்டப்பட்டு வேறுபாடுகளை கண்டறியம் சோதனை நடந்தது.

முடிவு:
புகைப்படத்தைப் பார்த்த பிறகு வழக்கமான பணிகளை மேற்கொண்டவர்களை விட புகைப்படத்தைப் பார்த்த பிறகு ஓய்வெடுத்தவர்கள் புகைப்படங்களின் வேறுபாடுகளை நன்கு கண்டறிந்து கூறினர். "இதன் மூலம் நுணுக்கமான செய்திகளையும் ஞாபகத்தில் வைக்கும் திறன் ஓய்வினால் அதிகரிக்கிறது என்ற சான்று கிடைத்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் மூலையில் என்ன நிகழ்கிறது? என்ன ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது? என்பதே எங்களது அடுத்த கட்ட ஆய்வு" என்று கூறுகின்றனர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr Craig மற்றும் Dr Michaela Dewar.
--The Assam Tribune நாளிதழிலிருந்து.
--medicalxpress.com


திருப்பராய்த்துறை (திருச்சி)  தபோவனம், பள்ளி மற்றும் சோழவந்தான் (மதுரை) விவேகானந்தா கல்லூரியின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் மொழிகளுள் ஒன்று "சுகமாக கண்களை மூடியிருப்பது மட்டும் ஓய்வல்ல, ஒரு செயலிலிருந்து இன்னொரு மாற்று செயல் செய்வதும் ஓய்வுதான் (Change of Work is Rest)". மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று இது.

குழந்தைகளை படிப்பை மட்டுமே ப(பி)டித்துக்கொண்டிருக்கும்படி
செய்யாமல் விளையாட்டு, உடற்பயிற்சி, செய்முறை பயிற்சி, பாட்டு பாடுதல், ஓவியம் அல்லது இரண்டு மணி நேரம் அவர்கள் விரும்பி அதிக ஆர்வத்துடன் ஈடுபடும் ஏதாவது ஒன்றில் (mobile phone, video game மற்றும் TV தவிர) ஈடுபட அனுமதிப்பது குழந்தைகளின் செயல்திறனையும், கற்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஏதாவது செயல்களில் ஈடுபட வைத்திருப்பது அவர்களை மேம்படுத்தும்.

மேலும் இரவு எட்டு (8) மணி நேர உறக்கம் மாணவர்களுக்கு மிகவும் அவசியம், ஏனெனில் பகலில் (கவனமுடன்) படித்த பாடங்கள் நன்கு நினைவில் பதிய உறக்கம் அவசியம். மற்றவர்களுக்கும் கூட இது பொருந்தும், நல்ல இரவு உறக்கம் இருப்பவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சிலர் சொல்வார்கள் "மனிதன் வாழ்நாளில் பாதி நேரத்தை தூங்கியே கழிக்கிறான்" என்று, மீதி பாதி வாழ்நாளில் திறம்படவும், ஆக்கபூர்வமாகவும் பயனுள்ள வேலைகளை செய்ய அந்த உறக்கம் அவசியம் தேவைதான்.

 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...