அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, சொந்தமாக ஒரு காட்டை உருவாக்கி 
வரும் இளைஞரின் தேடல், முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. அந்த காட்டில், 
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்
 மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்,
 ராஜி; பட்டதாரி.இவர், பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தீவிர பற்று 
உடையவர். அவற்றுக்கான வாழிடமாக, தங்களுக்கு சொந்தமான மாந்தோப்பை, வனமாக 
உருமாற்றி வருகிறார்.அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, அதன் கன்றுகளை தன் 
மாந்தோப்பில் வளர்த்து வருகிறார். குற்றாலம் பகுதியில் மட்டுமே விளையும், 
'ஸ்டார் புரூட்' மரக்கன்று, இவர் நிலத்தில், தற்போது காய் 
காய்த்துள்ளது.வாட்டர் ஆப்பிள், வேங்கை மரம், சரக்கொன்றை, வில்வம்,  அல்லி 
மற்றும் தாமரை, மின்ட் சுவை துளசி, இனிப்பு சுவை துளசி, குமிழ் தேக்கு, 
லெமன் கிராஸ், நன்னாரி, வெட்டிவேர் என, ஏராளமான மூலிகை செடிகளும், 
மரக்கன்றுகளும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.இவற்றில் பெரும்பாலானவை, 
தற்போது காய் காய்த்து வருகின்றன.இந்த காட்டில், பறவைகளையும், 
கால்நடைகளையும் வளர்க்கிறார்.
வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி,
 வாத்து, காதல் பறவைகள், காக்டெயில், பேன்சி ரக கோழிகள், பேன்சி ரக 
புறாக்கள், சிப்பிப்பாறை நாய் என, ஒரு பட்டாளம் இவரின் காட்டில் 
சுதந்திரமாக உலா வருகின்றன.இவை தவிர, அழையா விருந்தாளிகளாக, பாம்புகள், 
மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்டவையும் அருகில் உள்ள காட்டில் இருந்து,
 இவரது தோப்பிற்கு அவ்வப்போது வந்து செல்லும். தான் உருவாக்கிய காட்டில், 
ஒரு பூங்காவையும் இவர் வடிவமைத்துஉள்ளார்.அதில் உள்ள செயற்கை குளத்தில், பல
 வண்ண அல்லி மலர்கள் மிதக்கின்றன.இந்த அல்லி குளத்தில், கொசுக்களின் 
பெருக்கத்தை தடுக்க, வண்ண மீன்கள் விடப்பட்டுள்ளன. மரத்தடியில், மான் 
சிலையாக ஓய்வெடுக்கிறது. வெளிநாட்டு இன புற்களை, இங்கு வளர்க்கிறார்.
பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்
ஊருக்கு
 பொதுவான பகுதிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யவும், ஒரு நாற்றாங்கால் 
அமைத்து மரக்கன்றுகளையும் வளர்த்து வருகிறார். நண்பர்கள் குழு மூலமாக 
அவற்றை, பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரையில் நடவு செய்து வருகிறார். 
வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம், அந்த பகுதியில் கிடைக்கும் 
மரக்கன்றுகள் மற்றும் விதைகளை சேகரித்து வருகிறார்.குடும்ப உறுப்பினர்கள் 
மற்றும் நண்பர்களின் பிறந்த நாளையொட்டி, தோப்பில் அவர்கள் சார்பாக, புதிய 
மரக்கன்றுகள் நடும் வழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.
மரங்களுக்கு வில்லன் மான்!
மரங்கள் வளர்வது மானுக்கு பிடிக்காது; மரங்கள் வளர்ந்தால், அதனடியில் புற்கள் முளைக்காது. மான்களுக்கு தேவையான புல்வெளிக்கு மரங்கள் தடையாக இருப்பதால், மான்கள், மரங்களை அழிக்க முற்படும். இளம் செடிகளாக இருக்கும் மரங்களை, தன் கொம்புகளால் உரசி அவற்றை சேதப்படுத்தும்.மரத்தின் பட்டைகளை அழித்தால், அந்த மரம் பட்டுப்போகும். அருகில் உள்ள காட்டில் இருந்து இரவு நேரத்தில் எங்கள் தோப்புக்கு, மான்கள் வந்து செல்கின்றன.நான் வளர்க்கும் மரங்களையும் அவை சேதப்படுத்துகின்றன. இயற்கையின் படைப்பில் இது நியாயம் என்பதால், நான் வருந்துவது இல்லை. மான்கள், மரங்களை அழித்தாலும், மரங்களை வளர்ப்பதில் என் முயற்சி ஓயாது; மான்களின் மீதான அக்கறையும் குறையாது.
--தினமலர் நாளிதழிலிருந்து.


 
 
 
 
