அன்பாக பேசினால் செடி கேட்கும்! செடிகளை வீட்டில் வளர்ப்பது எப்படி என, விலாவாரியாக சொல்லித் தருகிறார், சென்னையை சேர்ந்த சுமித்ரா ஸ்ரீகாந்த்:
உங்கள் வீட்டு பால்கனியில் கூட, அழகான தோட்டம் அமைக்கலாம். செடிகளுக்கு வெயில் முக்கியம்.
பூச்செடிகளுக்கு, நல்ல வெயில் அவசியம்.
சுமாரான வெயில் தான் வீட்டிற்குள் வரும் என்றால், கிழங்கு வகைகள் வைக்கலாம்.
மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகள், மொட்டை மாடியில் அமர்க்களமாக வரும்.
வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை சுலபமாக வளரக் கூடியவை.
காலிபிளவரிலிருந்து, ஸ்ட்ராபெர்ரி, கோஸ் வரை, எல்லாமே மொட்டை மாடியில் பயிரிடலாம்.
வெயில் காலத்தில் மண்ணில் அதிக சூடு இருக்கும். விடும் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல் இருக்க, மண்ணின் மேல் காய்ந்த இலைகள் அல்லது அட்டைப் பெட்டித் துண்டுகளை போடலாம்.
செடி வளர்ப்பும், பிள்ளைகள் வளர்ப்பு போல, மிகவும் கவனமாக செய்ய வேண்டியது.
சும்மா, தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு, சரியா வளரலேன்னு புலம்பக் கூடாது. மாறாக, அக்கறை, அன்பு, ஊட்டம் என்று, எல்லாம் தரணும். செடிகளை ஒவ்வொண்ணாக கவனித்து, வளர்ச்சியில் பாதிப்பு இருக்கா, ஏன் பூத்துக் காய்க்க வில்லை என்பதை கவனிக்கணும்.
15 நாட்களுக்கு ஒரு தடவை உரம் போடணும்.பஞ்சகவ்யம் போன்ற, இயற்கை உரங்கள் கிடைக்கிறது. உரம் ஈரமாக இல்லாமல், நன்றாகக் காய்ந்திருக்கணும்.
தோட்டக்காரரையோ, ஆட்களையோ வைத்து, இவற்றை செய்தாலும், சொந்தக்காரர்கள், செடிகளை கூர்ந்து கவனித்து, அதோடு பேசி, ரசித்து வளர்ப்பதை, செடிகள் புரிந்து கொள்ளும்.
நான், பார்த்துப் பார்த்து கவனித்த எலுமிச்சைச் செடி, காய்க்காமல் படுத்தியபோது, கொஞ்சம் கோபமாகவே அதனுடன் பேசினேன். அதன் பிறகு காய்த்துக் குலுங்கியதை, பலரும் நம்ப மாட்டார்கள்.
உடல் பிரச்னை என்றால், நாம் மருந்து சாப்பிடுவது போல, செடிகளுக்கும் கொடுக்க வேண்டும். ரசாயன மருந்துகள் போட்டால், பூச்சிகள் இறக்கும். ஆனால், ரசாயனம் நமக்கு நல்லதல்ல. எனவே, வேப்பெண்ணெய், தண்ணீர் கலந்து தெளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
நோய்களுக்கு நாம், 'ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள், ஐந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்வது போல, செடிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் கொடுத்துவிட்டு, பூச்சிகள் போகவில்லையே என, கேட்கக் கூடாது.
செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்து, சமூக வலைதளங்களில் ஆலோசனை கேட்பதுடன், அனுபவஸ்தர்கள் துணையுடன், அழகாக செடிகளை வளர்க்கலாம். நிறைய குழந்தைகளைப் பெற்று, வளர்க்க முடியாமல் தவிப்பது போல, பெரிதாகத் தோட்டத்தைத் தொடங்கிவிட்டு, திண்டாடுவதை விட, சின்னதாகத் தொடங்கி நடத்துவது சிறந்தது!
Related sites
Sustainable Living with expert Ms. Sumithra Srikant