Friday, 16 March 2018

கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்:

கருங்கோழி மற்றும் நாட்டுக் கோழி வளர்த்து, லாபம் ஈட்டி வரும், தஞ்சை மாவட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, சரவணன்: விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கல்லுாரி படிப்பு முடித்து, சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்த போது, பொழுது போக்காக கருங்கோழிகளை வளர்க்க ஆரம்பித்தேன். ம.பி., - ஆந்திர மாநிலங்களில் இருந்து, கலப்பு இல்லாத, 'ஒரிஜினல்' கருங்கோழியை வாங்கி வளர்த்தேன்.


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எங்களுக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலத்தில், தென்னை முழுக்க இயற்கை முறை பராமரிப்பு செய்யும் நிலையில், நெல் சாகுபடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இத்துடன், நாட்டுக் கோழி, கருங்கோழிகளை வளர்த்து வருகிறேன்.

அசோலா, வேப்பிலை, முருங்கை இலை, அகத்திக்கீரை என, கீரைகளை தான் கோழிகளுக்கு உணவாக கொடுக்கிறோம். அதோடு, பகல் நேரத்தில் தோட்டத்துக்குள் மேய்ச்சலுக்கு விடுவதால், நாட்டுக்கோழிகளுக்கான குணாதிசயத்தோடு ஆரோக்கியமாக வளர்கின்றன. அதேபோல், அடர் தீவனத்தை, நாங்களே அரைத்து கொடுப்பதுடன், தோட்டத்துக்குள் கரையானையும் உற்பத்தி செய்கிறோம். பெரும்பாலான நோய்களுக்கு பாரம்பரிய நோய் தடுப்பு ஊசி, சொட்டு மருந்துக்கு ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.

நாட்டுக்கோழிகளில், 180 பெட்டை, 20 சேவல்; கருங்கோழிகளில், 31 பெட்டை, ஐந்து சேவல் என, தாய்க்கோழிகள் உள்ளன. இந்த தாய்கோழிகளில் இருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறோம். கருங்கோழி இறைச்சி, முட்டையில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கிறது. கருங்கோழியின் உடல், இறைச்சி, எலும்பு கறுப்பு நிறத்திலும், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்திலும், நாக்கு கருமை கலந்த சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

ஒரு கருங்கோழி ஆண்டுக்கு, 80 முட்டை இடும். அதில், 60 முட்டை தான், குஞ்சு பொரிக்க தேறும். அதிலும், பொரிப்பானில் வைத்தால், 40 குஞ்சு தான் வளர்ப்புக்கு தேறும். 31 கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 1,240 குஞ்சுகள் கிடைக்கின்றன. ஒரு மாதம் வளர்த்து, ஒரு குஞ்சு, 200 ரூபாய்க்கு விற்பதால், ஆண்டுக்கு, 2.48 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இதேபோல், 180 நாட்டுக் கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு, 7,200 குஞ்சுகள் உற்பத்தி செய்கிறோம். ஒரு நாள் ஆன குஞ்சு, 40 ரூபாய்க்கு விற்றால், ஆண்டுக்கு, 2.88 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதில் அனைத்து செலவும் போக, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 9677101100.
--தினமலர் நாளிதழிலிருந்து


Sunday, 11 March 2018

வேப்பிலை, எலுமிச்சை, புதினாவுடன் கூடிய டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ்

ஹேண்ட் வாஷ் மற்றும் டிஷ் வாஷ் செய்து, விற்று வரும், 63 வயதான, புஷ்பாவதி தீனதயாளன்: ஒவ்வொரு நாள் பொழுதையும், சுறுசுறுப்பாகவும், உபயோகமாகவும் கழிக்க ஆசை. இரு மகள், மகனுக்கு திருமணமாகி பேரன், பேத்திகளையும் பார்த்து விட்டேன். அன்பாக, அனுசரணையாக கணவன் இருக்கிறார். இருந்தாலும், உழைக்காத நாள் உபயோகமான நாளாக கழியாது என்பது, என் எண்ணம்.

மனம், உடம்பில் தெம்பு உள்ள வரை உழைக்க வேண்டும். எனக்கு எப்போதும் புதிது புதிதாக கற்க ஆசை. ஏற்கனவே ஐந்து வகையான உள்பாவாடைகளை தைத்து, விற்பனை செய்து வருகிறேன். சமீபத்தில் தான், டிஷ் வாஷ், ஹேண்ட் வாஷ் செய்ய கற்று கொண்டேன். கடைகளில் வாங்கும் இவற்றில், கெமிக்கல் தான் அதிகமாக இருக்கும்; அதனால், நிறைய பேருக்கு, தோல் அலர்ஜி ஏற்படுகிறது.

வேப்பிலை, எலுமிச்சை, புதினா:
வேப்பிலை, எலுமிச்சை, புதினா உட்பட, இயற்கையான பொருட்கள் சேர்த்து, நான் டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ் தயாரிக்கிறேன். கடைகளில் வாங்குவதை விட செலவும் குறைவாக இருப்பதுடன், கைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும். அடிப்படையான கெமிக்கல், தேவையான பழங்கள், மூலிகைகள், புட் கலர்ஸ், வாசனை, பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்கள் தேவை.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் லெமன், வேப்பிலை மற்றும் புதினா வகைகளும்; ஹேண்ட் வாஷில் விருப்பமான வகைகளையும் செய்ய முடியும். ஆரஞ்சு பழத்தின் சதைப்பற்றிலும் செய்யலாம். பழம், மூலிகைகளை சீசனில் மொத்தமான வாங்கி, பதப்படுத்தி வைத்து கொள்ளலாம். இரண்டும் தலா, 3 லி., தயாரிக்க, 1,000 ரூபாய் முதலீடு போதும்.கடைகளில் விற்பதை விட, குறைவான விலைக்கு தரலாம். பாதிக்கு பாதி லாபம் கிடைக்கும்.

ஆரம்பத்தில், 50 மில்லி அளவு நிரப்பி, சிறிய பாக்கெட்களில் விற்று, 'ஆர்டர்' அதிகரித்த பின், பாட்டில்களுக்கு மாறலாம்.வீடுகள் தான், உங்கள் முதல் இலக்காக இருக்க வேண்டும். கடை தயாரிப்புகளை விடவும், விலை குறைவு. கைகளுக்கு பாதுகாப்பு என்ற நம்பிக்கை வந்து விட்டால், அவர்களே உங்களுக்கு விளம்பர வேலையை பார்த்து, பிசினசை வளர்த்து விடுவர். அதைத் தொடர்ந்து, அலுவலகங்கள், கேன்டீன், ஓட்டல் போன்ற இடங்களில், 'ஆர்டர்' பிடிக்கலாம். ஒரு லிட்டர் தயாரிப்பிலிருந்து துவங்கலாம். அக்கம் பக்கத்தினர் இரண்டு, மூன்று பெண்களாக சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் முதலீடு போட்டு ஆரம்பிப்பது, சுலபமாக இருக்கும். அதில் வரும் லாபத்தை வைத்து, அதிகளவில் தயாரிக்கலாம். அரை நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களுடன் சேர்த்து, 750 ரூபாய் வாங்குகிறேன்!
--தினமலர் நாளிதழிலிருந்து

சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது, இதனை தவிர்த்து வேறு வகையான கொள்கலன்களை முயற்சி செய்தால் நன்று. 


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...