Thursday 10 August 2017

வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!


மாண்டிசொரி (  Montessori ) ஆசிரியர் பயிற்சியை, 15 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளார், குழந்தை கல்வியாளர் விஜயா: 

 நான் பிறந்தது கும்பகோணம். அம்மா தமிழாசிரியை; அப்பா ஆவின் நிறுவன அதிகாரி. எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்து, இ.ஐ.டி., பாரி நிறுவனத்தில் ஸ்டெனோவாக பணியாற்றினேன்.வங்கிப் பணியில் சேரலாமே என்ற விருப்பத்தில் தேர்வு எழுதியதில், சிட்டி வங்கியில் வேலை கிடைத்தது; நல்ல சம்பளம். ஆனால், மனம் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தது. யாருக்கோ வேலை செய்கிறோம் என்ற எண்ணம்; அடையாளம் இல்லையே என்ற கவலை. 


இந்நிலையில், திருமணம் முடிந்து வேலையை விட்டு, கணவருடன் பாலக்காடு சென்று விட்டேன்.பாலக்காட்டில், 'மலரும் மொட்டுகள்' என்ற பொருளில், 'ப்ளூமிங் பட்ஸ்' என்ற பிளே ஸ்கூல் துவங்கினேன். சென்னையில் அதற்கான மாண்டிசொரி கல்வி முறையிலான ஆசிரியர் பயிற்சியை பெற்றேன். அங்கே தான் குழந்தைகளின் உலகைப் புரிந்து, கற்றுக் கொடுப்பது பற்றிய அனுபவம் கிடைத்தது.எனக்கு ஆண், பெண் இரட்டையர் பிறந்தனர். அவர்களை வளர்க்கும்போதே மாண்டிசொரி முறையைத் தான் பின்பற்றினேன்.

1.ஒரு குழந்தைக்கு உடல் வளர்ச்சி மட்டும் போதாது, உள்ளமும் வளர வேண்டும். 
2.குழந்தைகளின் நடத்தையை அறிந்து கற்பிக்க வேண்டும்; 
3.அதிகாரம் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. 
4.பொறுப்பு கொடுக்க வேண்டும். அப்போது குழந்தைகளே கற்றுக் கொள்வர்.

பாலக்காட்டிலிருந்து சென்னை திரும்பி, மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தை துவங்கினேன். மாண்டிசொரிஎன்றாலே, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் கல்வி என்று நினைக்கின்றனர்; அது தவறு. அனைத்துக் குழந்தைகளுக்குமான சிறந்த கல்வி முறையாக, மாண்டிசொரி இருந்து வருகிறது. பெற்றோர், இரண்டாவது ஆசிரியர்கள்; ஆசிரியர்கள், இரண்டாவது பெற்றோர் என்று சொல்வர். பெற்றோரைப் பார்த்துத் தான், குழந்தைகள் கற்றுக் கொள்வர்.
குழந்தைகளைப் பற்றிய குறைபாடுகளை, தொடர் கவனிப்பில் தான் அறிய முடியும். அப்போது தான் நடத்தை, உடல் நலம், பேச்சு, உணவு, கற்பித்தல் என அனைத்திலும், மாற்றங்களை செய்ய முடியும். கற்றுக் கொள்வதே தெரியாத வகையில் கற்பிக்கும் முறை.எனவே, குழந்தைகளை சுதந்திரமாக வளர விடுங்கள். பறவை, விலங்குகள், தன் குஞ்சுகளை தன்னிச்சையாக பழக்குகின்றன. பெரும் ஆபத்து என்றால் தான், தாய் பறவை வருவதை பார்த்திருக்கலாம். குழந்தைகளுக்கு வழிகாட்டினால் போதும்; கற்றுக் கொள்வர்.

தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். ஆனால், வசதியை கொடுக்காதீர்; நமக்கு கிடைக்காதவை அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று, அபரிமிதமான பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்.குழந்தையை நேருக்கு நேராகப் புகழாதீர். அது, கற்றுக் கொள்வதை நிறுத்தி விடும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்காக, நீங்கள் நடிக்க வேண்டும். மிகவும் கூர்மையான கவனம் உள்ளவர்களாக, தற்கால குழந்தைகள் வளர்கின்றனர். சொல்லிப் புரிவதை விட, அவர்களுக்குச் சொல்லாமல் நிறைய புரிகிறது.
கொஞ்ச காலம் தான் நாம் வளர்க்கிறோம். மற்ற காலங்களில் சமூகம் தான் குழந்தைகளை வளர்க்கிறது. 


---தினமலர் நாளிதழிலிருந்து.

2 comments:

  1. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் முதல் கருத்து பதிவிற்க்கும் நன்றி ராஜி அவர்களே

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...