Sunday, 24 December 2017

இல்லம் தேடிய சிகிச்சை

ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் டாக்டர் கேரக்டர்களைப் பார்க்க முடியும். கறுப்பு-வெள்ளை படங்கள் போலவே, இப்படிப்பட்ட டாக்டர்களும் காணாமல் போய்விட்டார்கள். அந்த மரபை மீட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனின் முயற்சியில் உருவான ‘இல்லம் தேடிய சிகிச்சை’ என்ற அமைப்பு.

முதியவர்களை மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல முடியாத சூழல் இருக்கும் போது, அதனால் கூட அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இது பற்றி மருத்துவ நண்பர்கள், மாணவர்களிடம் கோரிக்கை வைத்ததற்கு, 'தாராளமாக செய்யலாம்' என முன்வந்தனர். சென்னையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்த சேவையை செய்கின்றனர். எந்த நேரம் அழைத்தாலும், மறுப்புச் சொல்லாமல் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று, சிகிச்சை அளிக்கிறோம். வயதானவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு அழைத்து போவதால், கால தாமதம் ஆகும். அதை தவிர்க்கவே இந்த முறை.

 

இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட முதியவர்களை காப்பாற்றியுள்ளோம். வீடுகளுக்கு மட்டுமின்றி, முதியோர் இல்லங்களுக்கும் போய், சிகிச்சை அளித்து வருகிறோம். வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்கும்போது, அவர்கள் இலகுவாக உணர்வதால், பாதி பிரச்னை, அதிலேயே சரியாகி விடும். அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி, இயற்கை மருத்துவர்களும், ஹோமியோபதி மருத்துவர்களும் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, ஆதரவில்லாத முதியவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என, முடிவு செய்து உள்ளோம்.

முதியவர்கள், அவர்கள் வயதுக்கேற்ற உணவுகளை சாப்பிடாததால், பல நோய்கள் வருகின்றன; அதை தவிர்க்கவே இந்த முயற்சி. தற்போது, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள முதியவர்களுக்கும் இந்த அமைப்பின் கீழ் சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற திட்டத்தை, அரசே எல்லா பகுதிகளிலும் துவங்க வேண்டும்.
தொடர்புக்கு: 98841 45189; 98413 71278.

--தினமலர் மற்றும் விகடனிலிருந்து.
 வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

Sunday, 17 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 4

1) Dying to Be Me:
குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் தனது விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து, நடுத்தர வயதில் 4 வருடங்கள் புற்று நோயோடு போராடி மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு மரணானுபவத்தை (Near Death Experience) பெற்று புற்று நோயிலிருந்து மீண்டு வந்து தனது அனுபவங்களை இந்த நூலின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் ஹாங் காங்கில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா மூர்ஜானி. இவரின் நோய், அதற்க்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் கூறும் விளக்கங்களும் தனி பகுதியாக இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


தனது உடலை விட்டு உயிராக, எங்கும் நிறை பொருளாக இருந்த கணங்களையம், தனது நோய்க்கான காரணம், அது குணமான விதம் மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றி தான் உணர்ந்ததையம்  இப்புத்தகத்தில் ஆசிரியர் விவரித்துள்ளார். ஆசிரியர் சொல்லும் பல கருத்துகள் ரமண மகரிஷியின்  உபதேசங்களோடு ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது.

"மிகப்பெரிய ஒரு இருள் சூழ்ந்த மாளிகையில் சிறு விளக்குடன் நடந்து செல்வதற்கு ஒப்பானது நமது வாழ்க்கை பயணம்" என்கிறார் ஆசிரியர். "அதாவது உண்மையில் அளவுகடந்த, எல்லையற்ற, அன்பின் உருவான மஹாசக்தியின் அங்கமே நாம், ஆனால் இந்த உலகில் அதை மறந்து நமது சிறிய விழிப்புணர்வின் மூலம் முழுமையின் ஒரு மிகச்சிறிய பகுதியைத்தான் நாம் பார்க்கிறோம்" மேலும், முழுதும் வெளிச்சத்தில் நிரம்பியிருக்கும் பெரிய மாளிகை  எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட காட்சிக்கு ஒப்பானது தான் உடலிலிருந்து வெளியிருந்த கணத்தில் உணர்ந்தவை அதாவது முக்காலங்களையும் தாம் உணர்ந்ததாக கூறுகிறார் ஆசிரியர்.

2) தம்மபதம் - பாகம் 1:


அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது .என்று கூறும் ஓஷோ அவர்கள் இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்கிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துகளைப் படித்தபின் அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்லுவது. என்பது சுலபமாக இருக்கிறது .வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் நின்று அணுகிய அவரின் அனுபவம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

3) 100 சிறந்த சிறுகதைகள்:


"இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு" என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. 

4) ஆழ்மனத்தின் அற்புத சக்தி:


இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவி உள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தம்மிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளை உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.

5)  நல்ல தமிழில் எழுதுவோம்:
.பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?
· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? · ‘செமயா இருக்கு மச்சி’ என்கிறோமே, அதென்ன ‘செம’?
· அதிக சலுகை, அதிகச் சலுகை: எது சரி?
· ‘வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதலாமா?
· திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா?
· வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?
· ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா?
· ‘இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா?


வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.

உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணங்களாகப் பயன்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல்.

Wednesday, 13 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 3

1) உழவுக்கும் உண்டு வரலாறு:

 கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடிய போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. தனது அனுபவங்களையும், பசுமை புரட்சிக்கு முன்னும் பின்னும் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், லாபகரமான விவசாய முறைக்கு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் நம்மாழ்வாரின் பார்வை வழியே விளக்குகிறது இந்தப்புத்தகம்.

2) ஒற்றை வைக்கோல் புரட்சி: 
நம்மாழ்வார் அவர்கள் மிகவும் மதித்த,இயற்க்கை விவசாய ஆசான்களுள் மசானபு ஃபுகோகாவும் ஒருவர். அவர் எழுதியதுதான் இந்த ஒற்றை வைக்கோல் புரட்சி. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு "இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்" என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.
 சரியாகக்கூற வேண்டுமானால் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்று தான்.இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது.ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்றையை ஆக்கிரமித்து அதை "மேம்படுத்து"வதில் அல்ல.

3) இந்தியன் ஆவது எப்படி?:
இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள் மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக் கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.


உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார  உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில் உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும்  இன்றைய நிலையையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில்  இந்தியனாக நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

4) ஒரு யோகியின் சுயசரிதம்:

இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த, உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.

5) சிவா முத்தொகுதி:
எந்த புத்தகத்தையும் தமிழில் படிக்கத்தான் பிடிக்கும், நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் இதை ஆங்கிலத்தில் படித்தேன். மிகவும் நேர்த்தியான பாத்திர படைப்புகளுடன் விறுவிறுப்பான எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ள நாவல். பொன்னியின் செல்வன், யவண ராணிக்கு அடுத்ததாக விரும்பி படித்த நாவலிது.

அமீஷின் சிவா முத்தொகுதி, புராண கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வரலாற்றில் உலவ விடும் புனைவிலக்கியம். திபெத்திய காட்டுவாசியாக மெலூஹாவுக்குள் நுழையும் சிவன், நீலகண்டராகி மெலூஹ மக்களான சூர்யவம்சிகளுக்கெதிராக செயல்படும் சந்திரவம்சிகளை, சூர்யவம்சி படையை வழிநடத்திச் சென்று துவம்சம் செய்வதோடு 'மெலூஹாவின் அமரர்கள்' நிறைவடைகிறது. சந்திரவம்சிகளுக்கும் நாகர்களுக்கும் என்ன சம்பந்தம்? மந்தரமலைத் தகர்ப்பின் பின்ணணி என்ன? சதியைக் குறி வைக்கும் நாகன் யார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடி சிவன் நாகர்களின் தலைநகரான பஞ்சவடிக்கு மேற்கொள்ளும் பயணமே 'நாகர்களின் இரகசியம்'. ஒரு வழியாக தீமையைக் கண்டறிந்து, அதை அழிப்பதற்காக சிவன் புனிதப் போர் நடத்துவதே 'வாயுபுத்ரர் வாக்கு'. வரலாறு, புராணம், அறிவியல் என அமீஷ் கலந்து கட்டி அடித்திருப்பதால் விறுவிறுப்புக்கும், விஷயங்களுக்கும் பஞ்சமில்லை. 

காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

தினமலர் இணையதளத்தில் எனக்கு பிடித்த இரண்டு பகுதிகள் இவை: (i) சொல்கிறார்கள் (ii) நிஜக்கதை. எனது பதிவுகளில் பாதி இதிலிருந்தோ அல்லது இந்த செய்தியை சார்ந்தோதான் இருக்கும். இந்த பதிவு நிஜக்கதை பகுதியிலிருந்து.

அதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.
  • அருகம்புல், வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், நெல்லிக்கனி சாறாகவும்(juice)
  • சுக்கு காபி, மூலிகை கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவை சூடான சூப்பாகவும்
  • கேழ்வரகு கஞ்சி, சிறுதானிய கஞ்சி, உளுந்தக்களி, முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.
இவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

  
சிவ நடராஜன் இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம். நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். மலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் "கையில் நல்லதொரு ஆரோக்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது?" என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார். இவருக்கு பக்க பலமாக இருப்பது இவர் மனைவி லலிதா.

சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை.

ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.

காசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.

வெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உணவகத்தின் மூலம் கிடைக்கிறது, பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்.

சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.
காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 2

1) பொன்னியின் செல்வன்:


பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி.1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை  அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. 

2) யவண ராணி:

 சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று  யவண ராணி  என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.
கதையோட்டம்:  ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். பூம்புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் பூம்புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராட இறுதி என்னாயிற்று என்பதே கதை. 

 3) எண்ணங்கள்:


எண்ணங்கள் எனும் இந்நூல் மனமே அனைத்திற்கும் அடிப்படை என்று சொல்கின்றது. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்றும், சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி உள்ளார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. இந்த நூல் விவரித்த உலகம் இதுவரை பார்த்திராதது. இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் செல்லும். இதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் இந்த 'எண்ணங்கள்' எனும் நூல். 

4) எனது சிந்தனைகள்:

ரமாகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டிருக்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை போதிக்கும் ஒரு நல்ல நூல் எனது சிந்தனைகள்.

5) குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்:
மூன்று பாகங்களை கொண்ட குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நூலானது ராமகிருஷ்ணர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஆரம்பித்து அவர் வாழ்வில் அவருடன் பயணித்த முக்கிய நபர்களின் வரலாறு, காளி கோவில் உருவான விதம் மற்றும் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகான மடத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி ஆகியவைப்பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சாரதானந்தர் என்ற சீடரின் பார்வையில் விளக்குகிறது. 

Monday, 11 December 2017

மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!-2 (புகைப்படங்கள்)

 நிசப்தம் தளத்திலிருந்து.....அடர்வனம்

ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.

அடர்வனம் ஒன்றை திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் என்ற ஊரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவிநாசியிலிருந்து கோவை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. பதினெட்டு சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு மரங்கள். சற்றேறக்குறைய அறுபது வகையான மரங்கள் இவை. சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு வகை மரத்தையும் கலந்து வைத்திருக்கிறார்கள். பதினெட்டு செண்ட் இடத்துக்கும் கம்பிவேலி உண்டு. அதனால் விலங்குகள் நுழைவதில்லை. உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்பதால் அவர்களும் வனத்துக்குள் நுழைவதில்லை. அடர்வனம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐம்பது செடிகள் பட்டுப் போய்விட்டன ஆயினும் இரண்டாயிரத்து நூறுக்கும் அதிகமான செடிகள் உயிர்பிடித்திருக்கின்றன.

(ஒரு வருடத்திற்கு முன்பு அடர்வனம்)

 
(ஒரு வருடத்திற்குப் பிறகு இப்பொழுது)

அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய நிபுணர் கண்டறிந்த மரவளர்ப்பு முறை இது. விதவிதமான மரங்களை வெகு நெருக்கமாக நட்டு வளர்க்கிறார்கள். தாவரங்கள் சற்றே வளர்ந்த பிறகு மனிதர்களாலேயே உள்ளே நுழைய முடியாதபடியான நெருக்கம். பறவைகளுக்கும், அணில், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகளுக்குமான வனமாக அது மாறிவிடும். விதைகள் திரும்பத் திரும்ப வனத்துக்குள் விழுந்து முளைக்கும் போது வனத்தின் நெருக்கம் பெருகிக் கொண்டேயிருக்கும்.

பொதுவாக, செடிகளை இடைவெளி விட்டு நட்டு அவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் பார்த்து, மனிதர்கள் முறித்துவிடாமல் காத்து என சகல பிரயத்தனங்களையும் செய்து காப்பாற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவு. அடர்வனத்தில் ஆரம்ப முதலீடு சற்றே அதிகம் என்றாலும் தப்பித்து மேலே எழும்பக் கூடிய மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

அடர்வனம் அமைப்பது குறித்தான சந்தேகங்கள் இருப்பின் திரு.சதீஷைத் தொடர்பு கொள்ளலாம்- 98421 23457. 



Sunday, 3 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 1

மணிப்பூரின் அன்னையர்கள் - உலகையே உலுக்கிய போராட்டம்!:
காஸ்வேதா தேவியின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘திரௌபதி’ (1978). நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த திரெளபதி என்ற பெண்ணை, காவலர்கள் கைதுசெய்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதுதான் அந்தக் கதையின் சாராம்சம். அதில் வரும் திரெளபதி, ஆடைகள் களைந்து, ‘நான் வெட்கப்படுவதற்கு இங்கு எந்த ஆணும் இல்லை. ஆடையால் என்ன பயன்? நீங்கள் என்னை ஆடையிழக்கச் செய்ய முடியும். ஆனால், உங்களால் என்னை மீண்டும் உடுத்தச் செய்ய முடியாது. நீங்களெல்லாம் ஆணா?’ என்று கேட்க, அந்தக் கதை முடிகிறது. 

இந்தக் கதையை ஹீஸ்நம் கண்ஹைலால் என்ற மணிப்பூரைச் சேர்ந்த நாடக ஆசிரியர், 2000-ல், நாடகமாக அரங்கேற்றினார். அதில் அவரின் மனைவியும், ‘திரெளபதி’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவருமான ஹீஸ்நம் சாவித்ரி, மேடையில், நிர்வாணமாகத் தோன்றினார். இந்திய மேடை நாடக வரலாற்றிலேயே, ஒரு கதாபாத்திரம் ஆடையில்லாமல் தோன்றியது அதுதான் முதன்முறை. அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சரியாக நான்கு வருடங்கள் கழித்து, அதாவது 2004-ல், மணிப்பூரில் தங்கள் ஆடைகளைக் களைந்து, ‘இந்திய ராணுவமே, எங்களை வன்கலவி செய்’, ‘எங்கள் சதையை எடுத்துக்கொள்’ என்று கோஷமிட்டனர் 12 நவீன திரெளபதிகள். எதற்காக அந்த 12 பெண்களும் அப்படிச் செய்தார்கள்?

தங்ஜம் மனோரமா

அஸாம் ரைஃபிள்ஸ் படையின் தலைமையகம் மணிப்பூரின் இம்பால் நகரத்தில் உள்ள கங்லா கோட்டையில் அமைந்திருந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, பயங்கரவாதக் குழு ஒன்றுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறி, தங்ஜம் மனோரமா எனும் 32 வயது பெண் கைதுசெய்யப்பட்டு, கங்லா கோட்டைக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுகிறார். அடுத்த நாள், இவரது உடல், தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்படுகிறது. பிறகுதான் தெரிந்தது, அவர் அஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் அந்தப் படையினர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட சில பெண்கள், அங்குள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலைப் பார்க்கச் சென்றார்கள். அஸாம் ரைஃபிள்ஸ் படையின் இப்படியான தொடர் ஒடுக்குதல்களுக்கு எதிராக, மிகத் தனித்துவமான ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர் அந்தப் பெண்கள். ஜூலை 15 அன்று, கங்லா கோட்டை முன்பு தங்கள் ஆடைகளைக் களைந்து அந்த 12 பெண்களும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் குறைந்த நேரமே நடைபெற்ற அந்தப் போராட்டம், உலகையே உலுக்கியது. அதன் விளையாக, மணிப்பூரின் ஏழு தொகுதிகளிலிருந்து அஸாம் ரைஃபிள்ஸ் படை நீக்கப்பட்டிருக்கிறது. கங்லா கோட்டையிலிருந்த அந்தப் படையின் தலைமையகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 50 வயதுக்கு மேலான அந்த 12 பெண்கள், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘இமா’க்கள் என்று அழைக்கப்படலாயினர். ‘இமா’ என்ற மணிப்பூரிச் சொல்லுக்கு ‘அன்னை’ என்று பொருள். மணிப்பூர் பெண்களின் மானம் காக்கப் போராடிய அவர்களை, அன்னை என்று அழைப்பதுதானே உத்தமம்?

12 அன்னையர்கள்

இந்திய சமகால வரலாற்றில் தழும்பாக அமைந்துவிட்ட அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அந்த 12 அன்னையரைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை ‘தி மதர்ஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற புத்தகத்தில் ஆவணமாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் தெரசா ரஹ்மான். இதை ‘சுபான்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. வெறுமனே அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லாமல், மணிப்பூரின் கலாச்சாரம், இரண்டாம் உலகப் போரில் அதன் பங்கு, குடிப்பழக்கத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்களின் போராட்டம், பயங்கரவாதக் குழுக்களால் மணிப்பூர் சிறுவர்கள் கடத்தப்பட்டுக் குழந்தை பயங்கரவாதிகளாக ஆக்கப்படுவது, இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டுகால உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்ட மணிப்பூரின் நிகழ்கால வரலாற்றையும் இந்தப் புத்தகம் சொல்லிச் செல்வதால், இது தனித்துவம் பெறுகிறது.

தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு, அரசியல்ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தற்போது முயற்சித்துவருகிறார் இரோம் ஷர்மிளா. இந்த சந்தோஷமான தருணத்தில், இந்தப் புத்தகத்தை வாசிப்பது, ஆறிய புண்ணை மீண்டும் கிழித்துப் பார்க்கும் விஷயமல்ல; தழும்பாக மாறிவிட்ட வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் முயற்சி!

-ந.வினோத்குமார்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...