Monday 24 October 2016

ஒன்றா? இரண்டா? தேர்ந்தெடுங்கள்......

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இரண்டு கஷ்டங்களில் ஒன்றை அனுபவித்தே ஆக வேண்டும்.

1) ஒன்று நல்ல விளைவுகளுக்கான முறையான, ஒரு காலந்தவராத தொடர் உழைப்பு.

2) சோம்பலும் ஒழுங்கில்லாத கட்டுப்பாடில்லாத வாழ்க்கை மூலம் பிற்காலத்தில் பெறும் கஷ்டங்கள்.

இந்த இரண்டில் முதலாவது கஷ்டம் சிறியது. இரண்டாவது கஷ்டமோ பல மடங்கு கொடியது. சுருங்க சொல்வதானால் கஷ்ட்டப்பட்டு முன்னேறுவது  அல்லது பின்னேறி கஷ்ட்டப்பட்டுக்கொண்டே இருப்பது. இது பணத்திற்கு மட்டும் பொருந்த கூடியது அல்ல சுக வாழ்வு, பழக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் பொருந்த கூடியது.

(தனி) ஒருவன்:

ஒரு நல்ல நிலையை எட்டும் வரை இளமையில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வதும், சோம்பலில்லாமல் புத்திசாலித்தனமாக உழைப்பதும் கஷ்டம் தான். 

முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியத்திற்கான உணவுக்கட்டுப்பாடும் கஷ்டம் தான். உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதும், நாக்கு ருசியைக் கட்டுப்படுத்துவதும் சுகமான  விஷயமில்லை தான். 
ஆனால் அப்படி ஒருவன் கட்டுப்பாடாக வாழ்ந்து, கடும் உழைப்பு உழைத்துக் கொண்டிருக்கிறான். 

மற்றொருவன்:
 
மற்றொருவன் சோம்பி இருந்தும், கேளிக்கைகளிலும், வீண் பேச்சிலும், சுற்றித்திரிதலிலும் கழித்துக் கொண்டிருக்கிறான்,
கட்டுப்பாடின்றி ருசிக்கு சாப்பிட்டு செருக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் மற்றொருவன்

வேறுபாடு:
 
பத்து வருடங்கள் சென்ற பின் அவர்கள் இருவர் நிலையையும் பார்த்தால் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, நன்றாக உழைத்த ஒருவன் உயர்ந்த நிலைக்குப் போயிருப்பதையும், மற்றொருவன் வாழ்க்கையில் சொல்லும்படியான நிலையை எட்டாமல் அன்றாட வாழ்க்கையே பிரச்னைக்குரியதாய் கஷ்டப்படுவதையும் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் வயோதிகம் கொடுமையான காலக்கட்டமாகி விடும். முதலாமவன் நல்ல ஆரோக்கியத்தோடு பல சந்தோஷங்களை இழக்காமல் வாழும் போது, இரண்டாமவன் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து விழுங்கிக் கொண்டு, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்து உடல் உபாதைகளால் தினமும் கஷ்டப்படுவதை நாம் காணலாம்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான பழமொழி உண்டு. “சோகமான வார்த்தைகளிலேயே உச்சக்கட்ட சோகமான வார்த்தை ‘அப்படி இருந்திருக்கலாம்என்று காலங்கழிந்து சொல்வது தான்”.   

எப்படி வாழ விருப்பம் (தனி) ஒருவனாகவா அல்லது மற்றொருவனாகவா நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இணையதள வசதி இருக்கு, கணிப்பொறி இருக்கு, கைக்கு கீழ்  விசைப்பலகை, சுட்டி(Mouse) இருக்கு அப்படினு கைக்கு வந்ததை எழுதிவிட்டேன். இனி தனியொருவனாக மாறப்போகிறேன் ......இல்லை இல்லை தனி ஒருவனாக மாறலாம் வாங்க.


மூலம் :

சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவு இது, என்.கணேசன் அவர்களின் தளத்திலிருந்து எடுத்து இங்கு பதிவிட்டுள்ளேன். 
இதில் எந்தக் கஷ்டம் வேண்டும்? தீர்மானியுங்கள்!  

முதன் முதலில் 2012ல் என் நண்பன் செந்திலின் மூலமாக "மஹாசக்தி மனிதர்கள்" என்ற இவரின் பதிவு எனக்கு அறிமுகமானது. அதன் பிறகு இவருடைய எழுத்திற்கு வாசகனாகிவிட்டேன். சுய முன்னேற்றம், ஆன்மிகம் மற்றும் கதைகள் கொண்ட மிகவும் பயனுள்ள ஒரு தளம் இது
என்.கணேசன் 

  

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...