Saturday, 30 September 2017

தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2

''36 வருஷம் பொதுப்பணித் துறையில் பொறியாளரா வேலை பார்த்தேன். அப்போது பல கிராமங்களில் தண்ணீர் தொடர்பான ஆய்வுகளில் எங்கள்  துறை ஆண்டுதோறும் ஈடுபடுவது வழக்கம். அத்தகைய ஆய்வுகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதைக் கண்டுபிடித்தோம். இந்த விஷயம், எதிர்காலத் தண்ணீர் தேவை குறித்து எனக்குள் ஒருவித கேள்வியை எழுப்பவே,  நீர்ச் சேமிப்புப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தேன்.


இதற்காகப் பல ஊர்களுக்கும் சென்றேன். இப்படி நான் செல்வது அலுவலகத்தில் சில சிக்கல்களை உருவாக்கவே, விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு முழுநேரமும் நீர் மேலாண்மைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டும் வேலையையும் தொடர்ந்தேன். அந்த அடிப்படையில், மொட்டை மாடியில் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளேன். இதுவரை 2,014 வீடுகளுக்கு இந்த முறையில் 'மழைநீர் சேமிப்புத் தொட்டி’ அமைத்துக் கொடுத்து இருக்கிறேன்.'சுமார் 80 சதவிகித நோய்கள் தண்ணீர் மூலம்தான் பரவுகிறது’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் குடி தண்ணீரில் 500 மில்லி கிராம் அளவுதான், தாது உப்புகளின் கூட்டுத்தொகை இருக்க வேண்டும். அவைதான் தரமான தண்ணீர் என்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளின் குடி தண்ணீரை ஆய்வு செய்தது. அவற்றில், நம்முடைய தண்ணீருக்கு 120-வது இடம்தான் கிடைத்து இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்த தாது உப்புகளின் கூட்டுத்தொகை ஆயிரத்தைத்  தாண்டியது. நம்முடைய பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்குத் தண்ணீரும் காரணமாக இருக்கிறது. இதுவரையில் நாம், குடிப்பதற்குப் பயன்படுத்திவந்த ஆற்று நீரிலும், குளத்து நீரிலும், கிணற்று நீரிலும் சாக்கடை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து தண்ணீர்  மாசடைந்துவிட்டது. நம்முடைய வருமானத்தில் கணிசமான தொகை, தரமான தண்ணீர் என்ற பெயரில் விற்பனை செய்யும்  மினரல் வாட்டருக்குத்தான் போகிறது. ஆனால், அவற்றில் எந்த  'மினரல்'களும் இல்லை.


இவை அனைத்துக்கும் மாற்று 'மழைநீர் சேமிப்பு’ ஒன்றுதான். மழைநீரில் அனைத்து விதமான மினரல்களும் தேவையான அளவுகளில் இருக்கின்றன. இதற்காகப் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை. வீடுகளில் சின்ன மாற்றம் செய்தாலே போதும். கான்கிரீட் வீடுகள் என்றாலே,  மொட்டை மாடியில் இருந்து மழை நீர் கீழே வருவதற்குக் குழாய்கள் இருக்கும். அந்தக் குழாய் வரும் பகுதியில் உள்ள ஜன்னலின் வெளியே மழை, வெயிலுக்காக அமைக்கப்படும் தடுப்பின் (சன் ஷேட்) மீது ஒரு சிறிய வடித்தொட்டி அமைத்து,  மழை நீரை வடிகட்டினால்,  தூய நீராகக் கிடைத்துவிடும். தூய்மையான இந்த நீரை அடுக்களையிலும்கூட சேமித்துச் சமையல், குடிநீர் என்று எல்லாவற்றுக்கும் பயன்படுத்த முடியும். அடுக்களையில் இருக்கும் டேங்கில் காற்றும் வெளிச்சமும் புகாத அளவுக்கு மூடி வைத்துவிட்டால், அதில் சேமிக்கப்படும் நீர் வருடக் கணக்கானாலும் கெட்டே போகாது. என்னிடம் இருக்கும் மழைநீர் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் கெட்டுப்போகாமல் இருக்கிறது.


அடுக்களைத் தொட்டியின் மேல்புறம் ஒரு குழாயை அமைத்து, அதை ஆழ்துளைக் கிணற்றில்  இணைத்துவிட்டால்,  கூடுதல் நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும். இத்தகைய பரண் சேமிப்புக் கலன் பல்வேறு அளவுகளில் கடைகளிலேயே தயாராகக் கிடைக்கிறது. ஒரு வீட்டுக்கு மொத்தம் 10.000 முதல் 12,000 ரூபாய் செலவு செய்தாலே நான்குபேர் உள்ள குடும்பத்துக்குத் தண்ணீர் போதுமானது. மழைநீரை, பூமிக்கு அடியில் சேகரிக்கும் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்திவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் அணைக்கட்டு அளவிலான நீரைத் தேக்கி வைத்திட முடியும். உபயோகத்துக்குப்போக உபரி நீரைக் கிணற்றிலும் பூமியிலும் சேகரிக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் கூடுவதோடு, தண்ணீரின் கார அமிலத்தன்மையும் மாறிவிடும். நீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் மழை நீரைச் சேமிக்கவேண்டியது அவசியம்'' என்றார் அக்கறையுடன்.

- காசி.வேம்பையன்No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற