Tuesday 5 September 2017

விவசாயத்தை லாபகரமாக்கலாம்!

வெளிநாட்டு வேலை:

வெளிநாட்டு வேலையை உதறி, விவசாயம் செய்து லாபம் ஈட்டி வரும் வீரமணி: புதுக்கோட்டை, விராலிமலை அருகே, மீளவேலி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, நான்காண்டுகள் இங்கும், சிங்கப்பூரில் இரு ஆண்டுகளும் வேலை பார்த்தேன்; நல்ல வருமானம் கிடைத்தது. விவசாயிகளின் நிலை, மனதை பாதித்தது. வெளிநாட்டில், 14 மணி நேரம் வேலை பார்ப்பது போல, நம் ஊரில் வேலை பார்த்தால், விவசாயத்திலும் மாற்றத்தை உருவாக்க முடியும் என, தோன்றியது.


உறுதியான முடிவு:

ஊர் திரும்பி, வீட்டில் கூறியதும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எங்கள் நிலத்தில், யூகாலிப்டஸ் மரம் பயிர் செய்திருந்தனர்; அது, மண்ணுக்கும், சூழலுக்கும் கெடுதல் தரக்கூடியது. விவசாயம் பார்க்க ஆரம்பித்ததும் அதை அழித்து, எலுமிச்சை பயிர் செய்தேன். அப்புறம், நிலத்தின் தன்மை, மண் வளத்தை கண்டறிந்து, ஆலோசனை பெற்று, கத்தரி, தக்காளி, வெண்டை, நெல் என, மாற்று பயிரிடல் முறையில் தொடர்ச்சியாக செய்து வருகிறேன். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. மேலும், தினசரி வருமானத்திற்காக கீரையும், நீண்ட நாள் பயிர்களான தென்னை, வாழை; தண்ணீர் வசதி இல்லாத வறட்சி காலங்களில், கள்ளிச் செடி, கற்றாழை என, பயிர் செய்வேன். வேலிக்கு பதிலாக தேக்கு, தென்னை வைத்துள்ளேன். இவ்வாறு சிறு முயற்சிகள் கூட வீண் போகாமல், வருமானத்தை கொடுக்கிறது.

சந்தைபடுத்துதல்: 

விவசாயம் லாபகரமாக இருக்க காரணம், என் தோட்டத்தில் விளையும் பொருட்களை வியாபாரிகளிடம் கொடுக்காமல், நேரடியாக சந்தைப்படுத்துவது தான். விவசாயம் எனில், நெல் தான் என இல்லை. காலத்திற்கேற்ப மாற்று விவசாயம் பண்ணலாம். நல்ல மழை பெய்தால் நெல், மழை குறைவாக இருந்தால் கம்பு, கேழ்வரகு, சோளம் போடுவேன். விவசாயம் செய்யும் போது, அது ஒருங்கிணைந்த பண்ணையாக இருந்தால், இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால், ஆடு, மாடு, கோழி வளர்க்கிறேன். அதன் மூலம் மண்ணுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது; வருமானமும் வருகிறது. விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்பதே, என் நோக்கம். அதன் மூலமாக, இதை முன்மாதிரி பண்ணையாக்கி,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


அரசு இயந்திரம் உதவினால்.........:

விவசாயம் நஷ்டமடைய, விவசாயத்துறை அதிகாரிகளும் முக்கிய காரணம். அரசிடம் நிறைய விவசாயம் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும், அது மக்களுக்கு தெரிவதே இல்லை அல்லது தெரிவதற்குள் கால அவகாசம் முடிந்து போகிறது. இப்போது நான், மாட்டுக்கு தீவனத்துக்காக விண்ணப்பித்துள்ளேன். அதற்கு சரியான பதில் கொடுக்காமல் அலைய விடுகின்றனர்.
படிப்பறிவு உள்ள என்னால் தேட முடியும், அலைய முடியும். வயதான, படிக்காத விவசாயிகள் என்ன செய்வர். இது போன்ற சிக்கல்களை தீர்க்க, அரசு முன்வந்தால் தான், விவசாயத்தை லாபகரமாக மாற்ற முடியும்.நிம்மதியான இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, கண்டிப்பாக விவசாயம் கொடுக்கும். விவசாயி என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

---தினமலர் நாளிதழிலிருந்து.



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...