Wednesday, 13 July 2016

டெல்லி விசா (VISA)அனுபவம்

கடந்த வருடம் நெதர்லாந்து விசாவுக்காக  காத்திருக்கும் போது, நெதர்லாந்து தூதரகத்திலிருந்து நேர்முக விளக்கம் வேண்டி திடீரென டெல்லி வர சொல்லி இருந்தார்கள். ஜூன் 18 நேர்முக விளக்கம், 17 ஆம் தேதி அவசர அவசரமாக விமானச் சீட்டு பதிவு செய்து அன்று மாலையே குவாஹாத்தியிலிருந்து கிளம்பினேன், சேர்த்து வைத்திருந்த பணத்தில் 20,000 காலி. 8 வயதில் முதல் முறையாக டெல்லி சென்றது அதன் பிறகு இப்போது 22 வருடம் கழித்துச் செல்கிறேன், அந்த வயதில் பார்த்த எதுவும் இப்போது ஞாபகம் இல்லை.

18 காலை டெல்லி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து Doualakuan station வரை மெட்ரோ ரயிலில் சென்று பின் ஆட்டோ பிடித்து நெதர்லாந்து தூதரகம் செல்லும் போது மணி காலை 9.30.  நல்ல  வெயில், காலை 10 மணிக்கு சந்திக்க சொல்லி முன் அழைப்பில் இருந்தது. Conferenceக்கு செல்ல விசா விண்ணப்பித்திருந்தேன், அங்கு சென்று பேசப்போகும் எனது வேலை பற்றிய இணைப்பை விசா விண்ணப்பத்தில் இணைக்கவில்லை அதனால்தான் இந்த நேர்முக விளக்க அழைப்பு, பொதுவாக நெதர்லாந்து விசாவிற்க்கெல்லாம் நேர்முகத்திற்கு அழைக்க மாட்டார்கள (2015 நிலவரம் தற்போது மாறியிருக்க கூடும் )

தூதரகம் அருகிலேயேதான் விசா அலுவலகமும், சுற்றிலும் பலத்த பாதுகாப்பு, வாயிற் காவலரின் பரிசோதனைக்குப் பிறகு கொண்டுசென்ற பொருட்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி தேவையானதை மட்டும் எடுத்து சென்றேன், வழமை போல இந்த முறையும் ஒரு முக்கியமான கடிதத்தை மறந்து வைத்துவிட்டு வந்திருந்தேன், அது தூதரகத்திலிருந்து அனுப்பிய அழைப்பு கடிதம். ஒரு வழியாக கடிதம் இல்லாமலே நேர்முக விளக்கம் பெற்று அனுப்பி வைத்தார்கள். செல்லும் நோக்கத்தை பற்றி தெளிவாக சொன்னவுடன் வேறெதுவும் கேட்கவில்லை.

எல்லாம் முடிந்து வெளியில் வரும் போது ஒரு ஆட்டோ நின்றிருந்தது, ரயில்நிலையம் அருகில் ஒரு ஹோட்டலில் விடும்படி கேட்டுக்கொண்டேன். ஆட்டோக்காரர் என்னை கொண்டு வந்து பாஹர்கன்ச்சில் (Paharganj) ஒரு ஹோட்டலில் விட்டு சென்றார். சுமாரான அறை, எல்லாம் சேர்த்து (Service tax, 1 வேலை சாப்பாடு) 1000 ரூபாய் ஒரு நாளைக்கு. அடுத்த நாள் செல்ல ரயிலில் பயணசீட்டு கிடைக்காமல், விமானத்திலேயே மீண்டும் முன்பதிவு செய்தேன். இனி எந்த வேலையும் இல்லை என்பதால் நன்றாக தூங்கி எழுந்து மாலையில் சென்று connaught place ஐ ஒரு முறை சுற்றி வந்தேன், இரவு நல்ல உறக்கம்.

19 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விமானம், காலை 10 மணிக்கு எல்லாம் அறையை காலி செய்து கிளம்பிவிட்டேன். என்னிடம் இப்போது 700 ரூபாய் மட்டுமே இருந்தது, சாப்பாட்டிற்கு அதிகம் செலவழிக்க வேண்டாமே என்று NDLS ரயில்நிலையம் எதிரே இருந்த ஒரு சிறு உணவகத்தில் சென்று ஒரு செட் பூரி சாப்பிட்டு "விலை என்ன?" என்று கேட்டால் 150 ரூபாய் என்று சொல்கிறார் கடைக்காரர். வேறெங்காவது சாப்பிட்டால் அதிகம் செலவாகும் என்று இங்கு வந்து சாப்பிட்டால் இவ்வளவு விலையா? திரும்ப திரும்ப எனக்கு தெரிந்த ஹிந்தியில் கேட்டாலும் அதையேதான் சொல்கிறார், என்ன பேசி எப்படி புரியவைக்க, எனக்கோ நேரமாகிறது, 150 ரூபாயில் நான் ஒன்றும் ஏழையாக போவதில்லை நீ ஒன்றும் பணக்காரன் ஆகப்போவதில்லை என்று கொடுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் டீ குடிக்கும் போது தான் கவனித்தேன், நான் சாப்பிட்ட கடையின் பின்னால் ஒரு தமிழ்காரரின் உணவகம் இருக்கிறது.

150 ரூபாய் போன வருத்தத்தில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன். NDLS ரயில் நிலையத்தின் நடைமேடையில் சென்றுதான் மெட்ரோ ரயில் நிலையத்தை அடையமுடியும், அவசரத்தில் நடைமேடை டிக்கெட் வாங்கவில்லை. அங்கு நின்று சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரியை பார்த்த பின் தான் எனக்கு நடைமேடை டிக்கெட் பற்றிய ஞாபகம் வந்தது, "என்னடா இது சோதனை நம்மையே சுத்தி சுத்தி வருகிறது" என்று எண்ணிக்கொண்டு, அவரை கவனிக்காமல் சென்று விடலாம் என்று பார்த்தும் பார்க்காதது போல நழுவ முயன்றேன், நம்மை போல எத்தனை பேரை பார்த்திருப்பார், என்னை அப்படியே அமுக்கிவிட்டார்.

தத்தகா பித்தக்கா என்று தெரிந்த ஹிந்தியில் புரியவைக்க முயற்சித்தேன் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. அபராதம் என்றால் 500 ரூபாய் அல்லது அவரை மட்டும் கவனித்தால் பணம் சிறிது குறையும், பேரம் பேசி 300 ரூபாய்க்கு வந்து நின்றது. மூக்கால் அழுதுகொண்டே பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். மெட்ரோ ரயிலில் NDLS to Airport க்கு 100 ரூபாய்,  550 ரூபாய் 20 நிமிடத்திற்குள் காலியாகிவிட்டது. விமானத்தில் ஏறும் போது 150 ரூபாய்தான் என்னிடம் இருந்தது. குவாஹாத்தி வந்திறங்கி கல்லூரி வர மேலும் 120 ரூபாய் செலவு. இது இப்படி முடிய நல்ல விஷயமாக 20 ஆம் தேதி விசா என் கைக்கு வந்துவிட்டது.

கற்றது:
** விலை கேட்காமல் எங்கும் சாப்பிட கூடாது
** யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கக்கூடாது.


தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்


Dr.அணில் ஜோஷி: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சரை (Mandsaur) சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தண்ணீர்: 3 பதிவில் பார்த்த ராஜேந்திர சிங் அவர்களை போலவே விவசாயிகளின் வறுமையை பார்த்து அவர்களுக்கு உதவ எண்ணி ஒரு தடுப்பணையை சொந்த செலவில் கட்டி தனது சேவையை துவக்கியவர் இன்று 10 தடுப்பணைகளை ஆற்றிலும், கால்வாய்களிலும் கிராம மக்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார். 

பெரிய அணைகளை கட்டுவதை விட சிறு சிறு தடுப்பணைகளை கட்டுவதில் நிறைய நன்மைகள் உள்ளது அதாவது பொருட்செலவு குறைவு, இடம் கையகப்படுத்துதல் இல்லை, பராமரிப்பு எளிது, உள்ளூர் மக்களின் பங்களிப்பு கிடைக்கும் இப்படி நிறைய, என்ன ஒன்று நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது அது ஒன்றுதான் குறை.

சாதனை: 1994 ஆம் வருடம் முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பதேகர் (Fatehgarh)  எனும் கிராமத்தில் தனது ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வரும் இவர் கிராம மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். 1999 ஆம் ஆண்டிலிருந்து மழை அளவு குறைய துவங்கிய பிறகு அந்த கிராமத்தில் மெல்ல மெல்ல வறட்சி அதிகமாகியிருக்கிறது 100, 200 குவிண்டால் சாகுபடி செய்தவர்கள் கூட இப்போது வெளியில் சென்று தானியங்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மருத்துவ செலவிற்கு பணம் தர முடியாத அளவிற்கு விவசாயிகள் சென்றதை கண்ட ஜோஷி இவர்களுக்கு உதவ எண்ணி களத்தில் இறங்கியுள்ளார்.

2008 ஆம் வருடம் கடும் வறட்சி குடிநீருக்கே தட்டுப்பாடு, இந்த சமயத்தில் "அருகில்  ஓடும் சோமலி (Somli) ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட்டினால் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கலாம்" என்று யோசனை கூறியிருக்கிறார் ஆனால் கிராம மக்கள் யாரும் அதை ஏற்க வில்லை. இருந்தும் தளராமல் நண்பர்களின் உதவியுடன் 1000 சிமெண்ட் மூட்டை சாக்குகளை வாங்கி அதில் மண்ணை நிரப்பி ஆற்றின் குறுக்கே போட்டு ஒரு சிறு தடுப்பை உருவாக்கியிருக்கிறார், 20 நாள் கழித்து பெய்த மழை சிறு தடுப்பணையை நிரப்பியிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது, சில வருடங்களாக தண்ணீர் வராமல் இருந்த அடி பம்பில் தண்ணீர் வர ஊர்மக்களுக்கு சந்தோசம், அந்த வருடம் ஒரு போக சாகுபடி எடுத்திருக்கிறார்கள். இவர் மீதிருந்த மரியாதை கூடிவிட்டது.


1 ரூபாய்:  முதல் தடுப்பணையை எப்படியோ கட்டி முடித்து அதன் பலனை பார்த்தவருக்கு அடுத்து ஒரு தடுப்பணை கட்டும் யோசனை, அதனால் மனைவியின் நகைகளை அடகு வைத்து அடுத்த அனையையும் கட்டியிருக்கிறார். 2010 ஆண்டு இவருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது, அது தான் 1 இலட்சம் பேரிடம் 1 ரூபாய் வசூலித்து, அதாவது ஒவ்வொரு விவசாய குடும்பத்திலிருந்தும் 1 ரூபாய் வசூலித்து அதன் மூலம் அணை கட்டுவது. இவரது செயல்களைப் பற்றி செய்திதாள்களில் வர, மக்களும் உதவ முன்வந்தனர். நண்பர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் 3 மாதத்தில் 1,00,000 ரூபாய் வசூலித்து 92,000 ரூபாய் செலவில் மூன்றாவது அணையை கட்டியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே படத்தில் இருப்பது.

விருது: இந்த முறையில் பணம் வசூலித்து மேலும் 8 அணைகளை கட்டி முடித்திருக்கிறார். இதோடு நில்லாமல் மேலும் 100 தடுப்பணைகளை கட்டும் திட்டத்துடன் பணியாற்றி வருகிறார், மருத்துவர் என்ற அடையாளம் போய் அணை கட்டுபவர் என்றே அனைவராலும் அறியப்படும் இவர் "என் சமுதாயப் பணியில் மனைவியின் பங்கு இன்றியமையாதது" என்கிறார், இவரது மகள்களும் தந்தையின் சேவையை எண்ணி பெருமைபடுகின்றனர். சென்னையை சேர்ந்த, இது போன்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்  செய்திகளை வெளியிடுகின்ற, The Weekend Leader (www.theweekendleader.com) செய்தி  நிறுவனம் "சிறந்த மனிதர்-2012" (Person of The Year-2012) விருது வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.

சில இணைப்புகள்:
1) http://www.theweekendleader.com/Heroism/919/dam-man.html
2)http://www.indiaunboundmag.com/anil-joshi-an-ayurveda-doctor-and-our-person-of-the-year/
3) http://www.newindianexpress.com/cities/chennai/article1428523.ece?


"Great minds have purposes, others have wishes"

                                                                                                  -WASHINGTON IRVING


Tuesday, 12 July 2016

தண்ணீர் 4: பீஹாரின் பசுமைப் பெண் (The Green Lady of Bihar)

ஜெயதேவி: பீஹாரின் நக்ஸல்கள் அதிகமுள்ள  முங்கேர் (Munger) மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், தனது போராட்ட மற்றும் உதவும் குணத்தால் இன்று இந்தியாவே அறியும் அளவுக்கு வளர்த்திருக்கிறார். 5ஆம் வகுப்பு வரை படித்த இவருக்கு, 12 வயதில் திருமணமாகிஇருக்கிறது 16 வயதில் குழந்தை பெற்றிருக்கிறார், அதன் பின்னரே அவரின் சமுதாயப்பணி தொடங்கியிருக்கிறது.


சவால்களும் சாதனைகளும்: தனது வகுப்பை சேர்ந்த பெண்களும், பழங்குடி இன பெண்களும் கந்து வட்டிகாரர்களிடமும், மேற் வகுப்பினரிடமும் படும் கஷ்டங்களை பார்த்த பிறகே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இந்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்ட போது, "தனி ஆளாக ஒன்றும் செய்ய முடியாது, குழுவாகத்தான் எதையும் சாதிக்க முடியும் அதனால் ஒரு குழு ஆரம்பித்து செயல்படுங்கள்" என்று சொல்லியிருக்கிறார் மருத்துவமனை பணிப்பெண் ஒருவர்.

அதன் பின் சுய  உதவி குழு ஒன்றை தொடங்கி பல பெண்களை அதில் சேர்த்து, சிறிது சிறிதாக தனது கிராம மக்களை பண முதலைகளிடமிருந்து காத்திருக்கிறார். நிலையான அல்லது உருப்படியான வருமானம் இல்லாததுதான் கிராம மக்கள் துன்பத்திற்கு காரணம் என்றறிந்து அதை தீர்க்க வழிதேடியிருக்கிறார். அனைத்திற்கும் மூல காரணம் தண்ணீர் தட்டுப்பாடு என்று அறிந்து அதை தீர்க்க வழி தேடும் போது, டெல்லியை சேர்ந்த கிஷோர் ஜெய்ஸ்வால் என்ற சமூக, சுற்று சூழல் ஆர்வலரை 2003 ஆம் ஆண்டு சந்தித்ததுதான் இவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவரின் வழிகாட்டுதலின் படி மழை நீர் சேகரிப்பு முறைகளை அறிந்து அதனை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறார். மக்களை ஒன்று திரட்டி, "ஓவ்வொரு குடும்பமும் இலவச சேவை தர வேண்டும், அதன் மூலம் நாம் நமக்காக ஒரு தடுப்பணை கட்டிக்கொள்ளலாம்" என்று கூறி 6 மாதத்தில் ஒரு தடுப்பணையை கட்டியிருக்கிறார், மக்களின் உதவியுடன். அடுத்த மழை காலத்தில் நீர் தேங்கி அதில் விவசாயம் செய்து லாபம் பெற்ற விவசாயிகள் மேலும் உற்சாகமுடன் அடுத்த தடுப்பணை கட்ட தாராளமாக உதவ முன்வந்திருக்கின்றனர். NABARD வங்கியை அணுக அவர்களும் உதவிசெய்ய இன்று 6 தடுப்பணைகள் கட்டப்பட்டு அனைத்திலும் மழை நீர் சேகரிக்கப்பட்டு 5000 ஏக்கர் தரிசு நிலங்கள் இன்று விலை நிலங்களாக மாறியிருக்கின்றன, மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இதோடு நில்லாமல் காடுகள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு,  மரம் நடுதல், அனைவருக்குமான கல்வி, குழந்தை திருமணம் ஒழிப்பு என்று அனைத்து சமூக முன்னேற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். நக்ஸல்கள், கந்துவட்டிகாரர்கள் இவர்களிடமிருந்து ஏதாவது தொந்திரவு இருந்ததா? என்று கேட்டால், "மக்களுக்காக உண்மையாக உழைக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும்" என்று கேட்டு தைரியத்தின் அடையாளமாய் விளங்குகிறார். இவரின் செயல் பல பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றி இருக்கிறது, வாழ்க்கையின் பக்கங்களை திரும்பிப்பார்க்க இதைவிட இனிமையான நிகழ்வு வேறென்ன வேண்டும்?

விருது: 2008-2009 ஆம் ஆண்டிற்கான "தேசிய இளைஞர் விருது (National Youth Award)" சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பில் சிறந்த பணியாற்றியதற்காக இவருக்கு தந்து மத்திய அரசு இவரை கெளரவித்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது இளைஞர் முன்னேற்றத்திலும், சமுதாய முன்னேற்றத்திலும் செயற்கரிய செயல் புரிந்த தனி நபர் அல்லது தொண்டு நிறுவனதுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் தனி நபர் எனில் 40,000 ரூபாய் அல்லது தொண்டு நிறுவனம் எனில் 2,00,000 ரூபாய் உள்ளடக்கியது இந்த பரிசு. சமீபத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு பற்றிய கருத்தரங்கிற்கு இந்தியா சார்பாக தென் கொரியா சென்று வந்துள்ளார்.

சில இணைப்புகள்:




Monday, 4 July 2016

தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்

Dr. ராஜேந்திர சிங்: 1959ல் ராஜஸ்தானில் பிறந்து ஆயுர்வேத மருத்துவம் படித்து அரசு வேளையில் சேர்ந்த இவர் சில காரணங்களுக்காக அரசு வேலையை உதறிவிட்டு கிராம மக்களின் முன்னேற்றதிக்காக முதலில் சேவையாற்ற சென்ற இடம் ராஜஸ்தானில் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷோரி கிராமம். கல்வி, மருத்துவம் இவற்றின் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் பிரச்சாரங்கள் மேற்கொண்டிருந்த இவரிடம் கிராமத்து மக்கள் "எங்களுக்கான முதல் தேவை உணவு மற்றும் நீர் அதற்கு பிறகே அனைத்தும்" என்று கூறி இருக்கின்றனர்.




இவரோ மருத்துவம் படித்தவர் விவசாயம் பற்றி அறியாதவர் இருந்தும் மக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து அவர்களுக்கு உதவ முன்வந்தார். வறண்டு பாலைவனமாய் காட்சியளித்த அந்த கிராமம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களால் நிறைந்திருந்தது, ஆண்கள் வேலைதேடி பக்கத்து நகரங்களுக்கு சென்று விட்டிருந்தனர். 

களப்பணி: சென்ற தண்ணீர் பதிவில் பார்த்த வரதராஜன் ஐயா போல இவரும் கையிலெடுத்த தீர்வு மழை நீர் சேகரிப்புதான். ஆனால் இருவரது அடிப்படை நோக்கமும் வேறுவேறு. கிராம மக்களை ஒன்று திரட்டி பிரச்சனை என்ன, அதற்கு தீர்வு என்ன, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் விவாதித்து, ஒரு சமூகமாக செயல்பட்டு நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி மொத்த நிலப்பரப்பு விபரம், மழை அளவு இவற்றை தெரிந்து கொண்டு தனது பணியை நண்பர்களுடன் துவங்கி மலை சரிவுகள், மேட்டு தரிசு நிலங்கள் இங்கெல்லாம் ஜொஹாட்ஸ (Johads) என்ற சிறு மணற் குன்றுகளை நீரின் ஓட்டத்தை தடுக்க அமைத்திருக்கிறார்.

இது மழை காலத்தில் நீரின் ஓட்டத்தை தடுத்து மண்ணிற்குள் இறக்க பயன்படுவதோடு, வெயில் காலங்களில் நிலத்தடி நீராதாரமாகவும் பயன்படுகிறது. "இந்த அமைப்பு இந்தியாவில் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்ததுதான், ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இவைகள் முற்றிலும் பராமரிக்கப்படாமல் அழிந்து போயின" என்கிறார். 

(The design of water johads. Source: Anupma Sharma, National Institute of Hydrology)

2015 STOCKHOLM WATER PRIZE : 1985ல் ஆரம்பித்த இவரது முயற்சியால் இன்றுவரை 2500 க்கும் மேற்பட்ட Johad கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன , இதனால் ஏரிகளில் நீர் பெருகியதுடன், முற்றிலுமாக வறண்டு போன 7 ஆறுகள் பல வருடங்கள் கழித்து -உயிரோட்டம் கண்டிருக்கின்றன. மக்களின் பங்களிப்புடன் அதிக செலவில்லாத, பெரிய தொழில்நுட்ப வசதிகள் எதுவும் தேவைப்படாத எளிய முறையை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். வறண்ட நிலம் இன்று பசுமையாய் காட்சியளிக்கிறது. இன்று பல குடும்பங்கள் விவசாயத்திற்கு திரும்பிஇருக்கின்றன, அதன் பலன், இவர் எதற்க்காக அங்கு சென்றாரோ அந்த கல்வி, மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு  செய்து கொடுத்துள்ளார். 

சர்வதேச அளவில் நீர் துறையில் செயற்கரிய சாதனைகள் புரிவோற்கு 1991 வருடத்திலிருந்து "STOCKHOLM WATER PRIZE" என்ற விருது வழங்கப்படுகிறது, இது நீர் துறையில் வழங்கப்படும் நோபெல் பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசு ஒரு அழகிய சிலை மற்றும் $ 1,50,000 பணமும் உள்ளடக்கியது. 2015 ஆம் ஆண்டிற்க்கான STOCKHOLM WATER PRIZE இவருக்கு கிடைத்திருக்கிறது. தருண் பாரத் சங் (Tarun Bharat Sangh ) என்ற அரசு சாரா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆறுகளை மீட்டெடுக்கும் பணியையும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் செய்து வருகிறார்.  


ஆக மொத்தம் அரசாங்கம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை நம்மைப்போன்ற அடிப்படை மக்களின் தேவைக்கு உபயோகப்படுவதில்லை. நாம்தான் விழித்தெழுந்து நமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித சக்தி அளவிடமுடியாதது!!!!!!!!!!

Saturday, 2 July 2016

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்

மழை நீர் பொறியாளர் வரதராஜன்: 


தமிழக பொதுப்பணித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழு நேரமாக மழை நீர் சேகரிப்பு ஆராய்ச்சியிலும், விருப்பமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் செய்து தருவதிலும் ஈடுபட்டுள்ளார். திருவாரூரில் வசிக்கும் இவர் மழை நீர் சேகரிப்பு பரிசோதனைகளுக்காக,  தனது வீ ட்டையே பரிசோதனை கூடமாக மாற்றி உள்ளார். மழை நீரை எப்படி சேகரிக்க முடியும், ஏன் சேகரிக்க வேண்டும், எப்படி பாதுகாத்து வைப்பது, என்னென்ன நன்மைகள் என்பது பற்றி விரிவாக கூறுகிறார். 
"பூமியிலிருந்து நீர் எடுப்பதல்ல, பூமிக்கு நீர் கொடுப்பதே எங்கள் நோக்கம்"
உந்து சக்தி: நீரில் கரைந்துள்ள கனிமங்களை (Total Dissolved Solids (TDS)) பொருத்து நீரின் தன்மை அளவிடப்படும், சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடிநீரின் தரம் 120 வது இடத்தில் உள்ளது. அதாவது குடிப்பதற்கு உகந்த நீரில் உள்ள அளவை விட பன்மடங்கு கனிமங்கள் நீரில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. பணியில் இருந்தபோது திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிணற்று நீரின் TDS தன்மையை ஆராய்வதுதான் இவரது வேலை, அனைத்து இடங்களிலும் நீரில் TDS அளவு வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே இருந்திருக்கிறது. 

இதற்கு தீர்வென்ன என்று தேடியபோது கிடைத்ததுதான் மழைநீர் சேகரிப்பு யோசனை. இவரது முக்கிய நோக்கமே நிலத்தடி நீரை தூய்மையாக்குவதுதான், அதாவது சேகரித்தது போக மீதமுள்ள மழை  நீரை நிலத்திற்கு கொடுப்பது, மழைநீர் சேகரிப்பால் மக்களும் பயனடைவர் நிலத்தடிநீரும் தூய்மையாகும். 8 வருடங்கள் முன் பிடித்த மழை நீரை இன்றும் பயன்படுத்தி வருகிறார். 

மழை நீர் சேகரிப்பால் பூமியை காப்பாற்றும் முயற்சியில் சேவை மனப்பான்மையுடன் 70 வயதிலும் முயற்சிக்கும் இளைஞன். எங்கள் வீட்டிலும் மழை நீரை குடிக்க பயன்படுத்தி வருகிறோம், குடிக்க அருமையாக இருப்பதோடு தாகமும் உடனே அடங்கிவிடுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.


Malaineer Er. K. Varadarajan,7, G.D. Nagar,Thiruvarur - 610 001

Phone : 04366 222675, Mobile : 9443152675
Email : malaineer@yahoo.co.in
Web : www.malaineer.in

 (http://www.iconhomz.com/rainwater-harvesting-why-you-need-it-and-how-it-is-done/)



WHAT AFTER 10 & 12?

வலையில் கிடைத்தது 

CIGMA-Career-After-10th-Chart

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்  
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள் 

Friday, 1 July 2016

1360 ஏக்கர் மொலாய் காடுகள் (Molai Forest):


பத்ம ஸ்ரீ ஜாதவ்  மொலாய் பாயேங்: இவர் அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் (Jorhat) மாவட்டத்தை சேர்ந்தவர். தனி ஒரு மனிதனாக முழு ஈடுபாட்டுடன் 30 வருடங்கள் பல வகையிலும் போராடி பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு தீவில் 1360 ஏக்கர் நிலப்பரப்புள்ள காட்டை  உருவாக்கியிருக்கிறார். அவரின் பணியை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த காட்டிற்கு அவரது பேரையே வைத்திருக்கிறார்கள் "மொலாய் காடுகள் (Molai Forest)".

விதை: பிரம்மபுத்ரா ஆற்றின் நடுவே ஒரு தீவு இருக்கிறது, நமது ஸ்ரீ ரங்கம் போல, அதன் பெயர் மஜவ்லி(Majuli). உலகில் உள்ள மிகப்பெரிய நன்னீர் தீவுகளில் (River Island) இதுவும் ஒன்று. 30 வருடங்களுக்கு முன்பு ஒரு மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள் அந்த தீவின் ஒரு பகுதியில் ஒதுங்கியிருந்திருக்கின்றன, வெள்ளம் வடிந்த பிறகு அனைத்து பாம்புகளும் வெயில் தாங்க முடியாமல் இறந்துவிட்டன.

இதனால் மிகுந்த வருத்தப்பட்ட பாயேங் அவர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட தொடங்கியதன் விளைவே இந்த 1360 ஏக்கர் காடு. இன்று அந்த காட்டில் யானை, புலி, மான், முயல், காண்டாமிருகம், குரங்கு மற்றும் ஏராளமான பறவை இனங்கள் குறிப்பாக அழியும் நிலையில் இருந்த பெருங்கழுகு (Vulture) என்று  ஏராளமான உயிரினங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களும் உள்ளன.

 
விதை வளர்ந்த விதம்: மரங்கள் வளர்த்தால் இந்த உயிரினங்களை காப்பாற்றலாம் என்று வனத்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார், ஆற்று மண்ணில் மரங்களை வளர்க்க முடியாது இருந்தாலும் முயற்சி செய் என்று சொல்லி 20 மூங்கில் கன்றுகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள், விடா முயற்சியுடன் மரம் நடுவதில் இறங்கியிருக்கிறார், ஆரம்பத்தில் கன்றுகள் வளர்ப்பதில் சிரமப்பட்டிருக்கிறார்.

பின் செவ்வெறும்புகள் மண்ணின் தன்மையை மாற்றுகின்றன என்பதை அறிந்து ஆற்று மண்ணில் நிறைய எறும்புகளை விட்டிருக்கிறார், மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாற ஆரம்பித்திருக்கிறது அப்படியே படிப்படியாக கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்து இன்று ஒரு காட்டையே உருவாக்கிவிட்டார்.

வேலி:  படிப்படியாக மரங்கள் வளர்ந்து காடு உருவாக ஆரம்பித்திருந்த சமயம் ஆபத்து மனித ரூபத்திலேயே வந்தது. யானைகள் இடம் பெயர்ந்து செல்லும் போது இவரது காட்டிற்கு வந்து,  காட்டை சுற்றி இருந்த வயல்களை நாசம் செய்திருக்கிறது, அதனால் கோபமடைந்த மக்கள் மரங்களை வெட்டும்படி சண்டையிட்டு இவரை அடித்தும் இருக்கிறார்களாம். ஒரு முறை அப்படி நடக்கும் போது "என்னை வெட்டி விட்டு மரத்தை வெட்டுங்கள்" என்று மரம் வெட்டுபவர்கள் முன்பு நின்றுவிட்டார், அவர்கள் இவரது தைரியத்தையும், நல்லெண்ணத்தையும் பார்த்து இவரையும், காட்டையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அடுத்து வேட்டையாடுபவர்களிடமிருந்து, வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறார்.

விருட்சம்: 20 வருடங்கள் யாருக்குமே, அந்த தீவு ஆட்களை தவிர, அந்த காட்டை பற்றி தெரியாமல் இருந்திருக்கிறது. ஒரு முறை ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டி சென்ற வன அதிகாரிகள், யானைகள் காட்டிற்குள் செல்வதை பார்த்து, "இவ்வளவு பெரிய காடு இங்கெப்படி?" என்று தேடி போன பின் தான் காட்டின் கதை வெளியே தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு படிப்படியாக கௌரவிப்புகள், பேட்டிகள், விருதுகள் என்று இன்று அனைவராலும் அறியப்பட்டிருக்கிறார். மத்திய அரசும் இவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.

தண்ணீர் 1: நீர் மேலாண்மை

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

 (https://www.tripadvisor.in/LocationPhotoDirectLink-g297679-d2422622-i188836246-Pykara_Lake-Ooty_Tamil_Nadu.html)

நீரின் முக்கயத்துவதை உணர்த்த குறளின் முதல் மூன்று சொற்களே போதும், அந்த அளவிற்கு நீர் நமது உடலின் ஒரு அங்கம், காற்றிற்கு அடுத்து இன்றியமையாதது நீர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான, சுகாதாரமான  நீர் அவசியம். இன்றைய காலகட்டத்தில், அதாவது நம்மாழ்வார் கூறுவதை போல பனி நீரையும் சேமிக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம், நீர் மேலாண்மை  என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று, நமக்கு தேவையான அளவு மழை கிடைக்கிறது ஆனால் பரவலாக கிடைக்க வேண்டிய மழை குறிப்பிட்ட சிறு கால இடைவெளியில் கிடைத்துவிடுகிறது அதை  சேமித்து, முறையாக பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு, தொழில்நுட்பம் இல்லாததே இங்கு பிரச்சனை.

தொழில்நுட்பம் என்பது நமது தேவைகளை பொறுத்தது; அதை சொல்லிக்கொடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்தான் வர வேண்டும் என்று இல்லை. அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் இயற்க்கை விஷயங்களை கூர்ந்து நோக்கினாலே போதும். அனைத்து விஷயங்களும் சிறு யோசனையில் இருந்துதான் பிறக்கிறது. நம்மை சுற்றி வாழ்பவர்களில் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும், அவற்றை ஒருங்கினைத்து பயன்படுத்தி நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை.
 
அந்த வகையில் நீர் மேலாண்மையில் நான் படித்த சில செய்திகளை, வியந்த சில மனிதர்களை, சில நுட்பங்களை பகிர்ந்து கொள்வதே இந்த "தண்ணீர்" தொடர்பதிவின் நோக்கம்.

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்
தண்ணீர் 4: பீஹாரின் பசுமைப் பெண் (The Green Lady of Bihar)
தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்
தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2
தண்ணீர் 8: மழை இல்லம்
தண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...